செல்போனால் பறிபோன இளைஞனின் உயிர்!!

179

செல்போனில் பேசியபடி மூன்றாவது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் சொந்தமாக மூன்றடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை பனியன் நிறுவனம் மற்றும் வீடுகளாக பிரித்து வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு (ஆக.4) ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரவு உணவு சமைத்து வைத்துவிட்டு, பிஹாரைச் சேர்ந்த சிவ்குமார் மற்றும் அவரது உறவினர் ராஜ்குமார் என்ற இருவரும் மூன்றாவது மாடியில் படி அருகே அமர்ந்து தங்களது உறவினர்களிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது எழுந்து அறைக்குச் செல்ல முயன்ற சிவ்குமார் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற ராஜ்குமாரும் தவறி கீழே விழுந்தார். இதில் சிவ்குமார்(22) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்‌.

ராஜ்குமாரும் பலத்த காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன் பூண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.