சென்னை…
சென்னை அமைந்தகரை எம்எம் காலனியை சேர்ந்தவர் லோகேஷ் (25). இவர் அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்ற லோகேஷ் வீட்டிற்கு வராததால், பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்தனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தபோதும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து லோகேஷ் பைக் எண், செல்போன் டவர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இதனிடையே, லோகேஷ் என்பவருடன் பணிபுரியும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் (27) என்பவரும் அதே நாளில் காணாமல் போனதாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் அவரது அக்கா புகார் அளித்தார். லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் ஒரே நாளில் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று இரவு வாஞ்சிநாதன் தனது சகோதரிக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில், “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என்னைத் தேடாதே,” என கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபாநிதி, இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் விசாரித்தபோது, செல்போன் மற்றும் டவர் வழியாக, பன்னீர் நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலைக் காட்டியது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை விடுதி கதவை திறக்காததால், விடுதி ஊழியர்கள் உதவியுடன் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, லோகேஷ் தரையில் பிணமாகவும், வாஞ்சிநாதன் தூக்கில் தொங்கியதாகவும் பார்த்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இருவரும் கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு முக்காப்பேரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாஞ்சிநாதன் லோகேஷ் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு வாஞ்சிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாஞ்சிநாதனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த லோகேஷ், வாஞ்சிநாதன் தன்னை விட்டு பிரிந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் வாஞ்சிநாதனை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன், லோகேஷை கொன்றார். விசாரணையில் இது தெரியவந்தது. எனவே ஓரினச்சேர்க்கை தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனியார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.