புனேவில்..
எந்தளவிற்கு தொழில்3நுட்ப வசதிகள் முன்னேற்றம் அடைகிறதோ, அதே அளவுக்கு அது சம்மந்தமான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த வருட தொடக்கத்திலிருந்தே நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பேராசை காரணமாக யாரென்றே தெரியாத நபர்களிடம் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையெல்லாம் இழக்கிறார்கள்.
பெரும்பாலும் இப்படி பணத்தை இழப்பவர்கள் யாரென்று பார்த்தோமென்றால், எளிதான முறையில் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சிறிய பணியை ஆன்லைனில் செய்தால் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என சொல்வதை இவர்கள் எளிதாக நம்பிவிடுகிறார்கள்.
சமீபத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடியில் சிக்கி லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார்.
ஆன்லைனில் ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி இவரிடமிருந்து ரூ.13 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி அரங்கேறியது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம்.
புனேவில் வசித்து வரும் இந்த பெண், நீண்ட நாட்களாகவே ஆன்லைனில் ஏதாவது பகுதி நேர வேலை கிடைக்குமா என தேடி வந்துள்ளார். ஜூலை 18 ஆம் தேதி எங்களிடம் பகுதி நேரம் வேலை இருப்பதாக கூறி சிலர் இவரை அணுகியுள்ளனர். கூடுதல் வருமானம் கிடைக்குமே என ஆசைப்பட்டு எதையும் யோசிக்காமல் சரி என ஒத்துக் கொண்டுள்ளார்.ஆன்லைனில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளுக்கு ரேட்டிங் வழங்கினால்,
ஒவ்வொரு ரேட்டிங்கிற்கும் உங்களுக்கு ரூ.150 தரப்படும் என இவரிடம் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் இவர் செய்த பணிகளுக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு “ப்ரீபெய்ட் டாஸ்க்” எனக்கூறி ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறும்,
அப்போதுதான் கூடுதல் பணி கிடைக்கும் எனவும் கூறியிருக்கிறார்கள். இவரும் மறு பேச்சு பேசாமல் அவர்கள் சொன்ன தொகையை முதலீடு செய்துள்ளார். அக்டோபர் 13 ஆம் தேதி வரையில் இவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் முடித்துள்ளார்.
தான் முதலீடு செய்த தொகையையும், இதுவரை செய்த பணிகளுக்கான பணத்தையும் எடுக்க முடிவு செய்த போது, அதெல்லாம் இப்போது எடுக்க முடியாது எனவும் கூடுதல் பணத்தை முதலீடு செய்தால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள்.
அப்போதுதான் அவருக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது உறைத்துள்ளது. இந்த மோசடிக்காரர்களை நம்பி சுமார் 13 லட்சம் ரூபாயை இழந்த அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதேபோன்ற சமீபத்தில் மும்பை சேர்ந்த நவி என்ற இளைஞர் ஆன்லைன் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.20.22 லட்சத்தை இழந்துள்ளார். ஆன்லைன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலம் இவரை மோசடியாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதனை நம்பி பணத்தை அனுப்பிய இவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்தார். இதுபோன்ற ஆன்லைனில் வேலை அல்லது முதலீடு திட்டம் என்று கூறி பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது.
தெரியாமல் வரும் நம்பர் மூலம் அழைத்தோ அல்லது ஆன்லைன் வேலை என்று கூறியோ பணம் கேட்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.