நான் கையைப் பிடிச்சுக்கிட்டேன், அவங்க அடிச்சுக் கொன்னாங்க.. கணவனைக் கொன்ற பெண்.. பகீர் வாக்குமூலம்!!

1081

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே இருக்கிறது செல்லிபாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. 37 வயது இளைஞரான இவர், கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றிவந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

பெரியசாமி தன்னுடைய மனைவிமீதும், குழந்தைகள்மீதும் அதீத பாசமாக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், “வீட்டில் இருப்பது போர் அடிக்கிறது. வேலைக்குச் செல்லவா?” என்று கணவரிடம் பிரேமா கேட்டிருக்கிறார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த பெரியசாமி, அதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, பிரேமா மோகனூரிலுள்ள ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில், பிரேமாவுக்கும் அதே பேக்கரியில் பணிபுரிந்த நந்திகேசவன் என்பவருக்கும் இடையில் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது.

நந்திகேசவன், திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி விளக்கநத்தத்தைச் சேர்ந்தவர். கடந்த 23-ம் தேதி அதிகாலையில் செல்லிப்பாளையம் பகுதியில் ஒரு வளைவில் சென்றபோது, எதிரே வந்த வாகனம் மோதி பெரியசாமி இறந்ததாகவும், பிரேமா காயமின்றி தப்பியதாகவும் கூறப்பட்டது.


பெரியசாமியின் உறவினர்களும் இதை விபத்து என்று முதலில் நம்பியதால், இந்தச் சம்பவம் தொடர்பாக மோகனூர் காவல் நிலைய போலீஸார் விபத்து என்று வழக்கு பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, பெரியசாமிய்ன் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இருந்தாலும், மோகனூர் காவல் நிலைய போலீஸார் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பிரேமாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில், தனக்கு நள்ளிரவில் காதில் வலி ஏற்பட்டதாகவும், மோகனூரிலுள்ள மருத்துவனைக்குச் செல்ல கணவரை அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.

அப்போது, நடந்த விபத்தில் பெரியசாமிக்கு இறப்பு ஏற்படும் அளவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், தான் காயமின்றி தப்பியதாகவும் பிரேமா கூறிய தகவல், போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், தொடர்ந்து பிரேமாவின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வந்தனர்.

அப்போது, பிரேமா தன்னுடைய கணவர் இறந்த துக்கம் சிறிதுமின்றி, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டனர். பெரியசாமியின் உறவினர்களும், கணவர் இறந்த துக்கம் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் பிரேமாவின் நடவடிக்கை குறித்து, போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.

இதனால், போலீஸாரின் சந்தேகம் வலுக்கவே, பிரேமாவை தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது, பிரேமா தன்னுடைய கணவர் பெரியசாமியைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில், பிரேமாவையும், அவரோடு திருமணம் மீறிய உறவில் இருந்த நந்திகேசவனையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், மோகனூர் காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒருவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இரண்டு இளைஞர்களோடு சேர்ந்து, எப்படி தன் கணவரைக் கொலைசெய்தார் என்பதை பிரேமா ‘பகீர்’ வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், “பேக்கரில் வேலை பார்த்தபோது எனக்கும் நந்திகேசவனுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்துவந்தோம்.

ஆனால், எங்களது ரகசிய உறவு பேக்கரி உரிமையாளருக்குத் தெரியவரவே, வேலையிலிருந்து இருவரையும் நீக்கிவிட்டார். அதோடு, எங்களின் இந்த உறவு கணவர் பெரியசாமிக்கும் தெரியவந்தது. அதனால், வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்று என்னை பெரியசாமி கண்டித்தார்.

ஆனால், நந்திகேசவனைச் சந்திக்க முடியாமல் எனக்குத் தவிப்பாக இருந்தது. இருந்தாலும், செல்போனில் மட்டுமே பேசிவந்தோம். இந்தச் சூழலில்தான், என் கணவர் உயிரோடு இருக்கும்வரை நந்திகேசவனோடு மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பது புரியவந்தது.

உடனே, இந்த விவரத்தை அவரிடம் சொல்லவும், என் கணவரைக் கொலைசெய்ய நந்திகேசவனும் சரி என ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, அவரை எப்படிக் கொலைசெய்யலாம் எனத் திட்டம் போட்டோம். அதன்படி, என் கணவரைக் கொலைசெய்து, விபத்துபோல் மாற்ற திட்டமிட்டோம்.

சம்பவத்தன்று எனக்கு காது வலிப்பதாக கணவரிடம் கூறினேன். பதறிப்போன அவரும், சிறிது நேரத்தில் சாகப்போகிறோம் என்பதை அறியாமல் என் பேச்சை நம்பி என்னை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

இன்னொரு பக்கம், வீட்டிலிருந்து புறப்பட்டவுடனேயே நான் நந்திகேசவனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தேன். அதன்படி, செல்லிபாளையம் அருகே வந்தபோது, நந்திகேசவன், அவருடைய நண்பர் தனுஷ் இருவரும் எங்களை வழிமறித்தனர். வண்டியை நிறுத்திய என் கணவரை, இருவரும் தாக்கத் தொடங்கினர்.

அப்போது திமிறி ஓடி, தப்ப முயன்ற என் கணவரின் கைகளை நான் பின்னாலிருந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அதன் பிறகு, நந்திகேசவன் கம்பியால் பெரியசாமியின் தலையில் ஓங்கி அடித்தார். தொடர்ந்து, நந்திகேசவனும் தனுஷும் அவரை அடித்தே கொன்றனர்.

அப்போது என் கணவர் அலறும்போது பாவமாகத்தான் இருந்தது. ஆனால், மனதைக் கல்லாக்கிக்கொண்டு, அவரின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். இருவரின் தாக்குதலில் நிலைகுலைந்த என் கணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கொலைத் திட்டத்தை கச்சிதமாக நடத்திய நந்திகேசவனும், அவருடைய கூட்டாளி தனுஷும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். நான் உடனே உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தேன். கார் ஒன்று, மோட்டார் சைக்கிள்மீது மோதிவிட்டது. இதில் கணவர் இறந்துவிட்டார் என்று கூறி, கதறி அழுதேன்.

அதை, உறவினர்களும் போலீஸாரும் முதலில் நம்பிவிட்டனர். இந்த நிலையில்தான் தற்போது இப்படி நடந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார். பெரியசாமி கொலை வழக்கில் அவர் மனைவி உட்பட மூவரைக் கைதுசெய்திருக்கும் போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.