2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார்! அடுத்தடுத்து தீக்குளித்த கணவன் மற்றும் மனைவி.. பகீர் சம்பவத்தின் பின்னணி!

408

தமிழகத்தில் குடும்ப பிரச்சினையில் கணவன் – மனைவி அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (38). இவருடைய மனைவி கனி (33). இவர்களுக்கு கவின் (15) என்ற மகனும், தர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர்.

ஜெயராம் சொந்தமாக லொறி வைத்து ஓட்டி வந்தார். அவர் லொறியில் வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி சென்று வருவார். 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து, ஒரு வாரம் தங்கி விட்டு மீண்டும் லொறியை ஓட்டிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அவர் வெளிமாநிலத்துக்குச் சென்றிருந்த போது லொறி பழுதடைந்து விட்டது. போதிய பணம் இல்லாமல் அதை சரி செய்ய முடியாமல் அவர் லொறியை அங்கேயே விட்டுவிட்டு பணத்துக்கு ஏற்பாடு செய்ய ஊருக்கு வந்து விட்டார்.


கொரோனா ஊரடங்கு காரணமாக பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் சிரமத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வெளியே சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவருடைய மனைவி கனிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஜெயராமும், அவரது மனைவியும் அடுத்தடுத்து தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தனர். இதனால் அவர்கள் இருவரும் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினர். இதில் வீட்டில் இருந்த அவர்களது பிள்ளைகள் கவின், தர்ஷினி மீதும் தீப்பற்றியது.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராம் மற்றும் கனி உயிரிழந்த நிலையில் கவினும், தர்ஷினியும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.