4 வருஷ காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு.. திடீரென பணத்துடன் மாயமான மாப்பிள்ளை!!

61

கேரள மாநிலத்தில், அடுத்த இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், விஷ்ணுஜித் என்கிற இளைஞர் திடீர் மாயமானது உறவினர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தங்களது மகனைக் காணவில்லை என்று போலீசில் பெற்றோர்கள், திருமண பத்திரிக்கையுடன் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் திருமணத்திற்கு இரண்டு நாட்களாக முன்பாக மாப்பிள்ளையைக் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. நேற்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய திருமணம் இன்னும் மாப்பிள்ளை கண்டுபிடிக்கபடாததால், பெண் வீட்டாரும் சோகத்தில் மூழ்கினர்.

மலப்புரத்தில் பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜித் (30). திருமணத்திற்கு பணம் ஏற்பாடு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக பாலக்காட்டில் உள்ள தனது நண்பர்களைப் பார்க்க விஷ்ணு சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அன்றைய இரவு 8 மணியளவில் விஷ்ணு வீட்டிற்கு போன் செய்து, நேரமாகி விட்டதால் அன்றைய தினம் உறவினர் வீட்டில் தங்குவதாகவும், மறுநாள் திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் விஷ்ணுவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பாலக்காட்டில் உள்ள அவரது நண்பரை தொடர்பு கொண்டபோது, ​​விஷ்ணுவிடம் ரூ.1 லட்சம் கொடுத்ததாகவும், பணத்துடன் விஷ்ணு கஞ்சிக்கோட்டில் இருந்து பாலக்காடு சென்றதாகவும் கூறப்படுகிறது.


விஷ்ணுவின் செல்போன் சிக்னல் கடைசியாக பயன்படுத்திய இடமாக கஞ்சிக்கோட்டைக் காட்டுகிறது. மகனைக் காணவில்லை என குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மலப்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விஷ்ணுவுக்கு பணக் கஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்று விஷ்ணுவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த பெண்ணை விஷ்ணு திருமணம் செய்யவிருந்தார். பாலக்காடு கஞ்சிக்கோட்டில் உள்ள ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார் விஷ்ணு.

விஷ்ணுவிடம் பணம் இருப்பதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாகவும், விசாரணைக்காக 2 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எஸ்பி தெரிவித்தார். உறவினர்களும், நண்பர்களும், அப்பகுதி மக்களும் விஷ்ணுவை தேடி வருகின்றனர்.