ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

381

மதுராந்தகம்….

மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரின் மகன் 19 வயது நேதாஜி. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தாம்பரத்தில் உள்ள கல்லூரிக்கு தினமும் மதுராந்தகத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்று வருவார் நேதாஜி.

நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்ல மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு சென்றார் நேதாஜி. அப்போது சென்னை நோக்கி செல்லும் விழுப்புரம் பயணிகள் ரயில் புறப்படத் தயாராக இருந்தது. இதனால் மாணவர் நேதாஜி ஓடிச்சென்று ரயில் பெட்டியில் ஏற முயற்சித்துள்ளார்.

ரயிலில் ஏற முடியாமல் கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதனால் தண்டவாளத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையே நேதாஜி சிக்கிக்கொண்டார்.இதனையடுத்து அவரது கால்களில் ரயில் பெட்டியின் சக்கரங்கள் அடுத்தடுத்து ஏறி இறங்கின.


நேதாஜியின் 2 கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டானது. ப்ளாட்பாரத்தில் நின்றவர்கள், ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேதாஜி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.