கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவியின் சடலம் : நடந்தது என்ன?

443

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் நேற்று மாலை, 4 மணியளவில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, அங்கு விசாரணை நடத்தினர்.

கடற்கரையில் இளம்பெண்ணின் சடலம் கரையொதுங்கிய பகுதியில் விசாரித்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பைகள், ஆண் மற்றும் பெண் இருவரின் காலணிகள், இரண்டு சைக்கிள்கள், இரண்டு கல்லூரி அடையாள அட்டைகளைக் கண்டெடுத்தனர். அதே போன்று, அந்த பகுதியில் கடற்கரை மணலில், ‘எவர் 2024’ என எழுதப்பட்டிருந்ததையும் கண்டனர்.

கண்டெடுக்கப்பட்ட கல்லூரி அடையாள அட்டையில், கேளவாக்கம் தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சுவக்ஷா (19) மற்றும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் கார்த்திக் (19) ஆகியோரின் விவரங்கள் இருந்தன. மாணவியின் உடல் மட்டும் கரை ஒதுங்கிய நிலையில், அலையில் மாணவி சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீனவர்கள் உதவியுடன் கார்த்திக்கின் உடலைத் போலீசார் தேடி வருகின்றனர்.


இதனையடுத்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை என்றும் புகார் அளித்த பின்னரே இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.