திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கணவன் கொலைக்கு பழி தீர்த்த திமுக ஊராட்சி தலைவி!!

156

திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் வெடிகுண்டு வீசி அரிவாளால் நடுரோட்டில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரத்தையடுத்த வண்டலூர், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வி.எஸ்.ஆராமுதன் (55) கடந்த 2001ம் முதல் 2011ம் ஆண்டு வரை வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், தற்போது காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும், துணை தலைவராகவும் பதிவு வகித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி 29ம்தேதி இரவு அவரது வீட்டின் அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்தவரை, காரில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்தநிலையில், கொலை நடந்த அடுத்த நாளே ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில், முனீஸ்வரன் (22), மண்ணிவாக்கம், சத்தியசீலன் (20), திருப்பூரைச் சேர்ந்த சம்பத்குமார் (20),

மணிகண்டன் (20), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சட்ட கல்லூரி மாணவன் உட்பட 5 பேர் சரணடைந்தனர். இதனையடுத்து, கடந்த 4ம்தேதி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மேலும் 4 பேரும் சரணடைந்தனர்.


சரணடைந்த 9 பேரையும் கடந்த 11ம்தேதி ஓட்டேரி போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில், கொலை வழக்கு தொடர்பாக கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம், விநாயகபுரம் 4வது தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (21),

வண்டலூரை சேர்ந்த முகிலன் (21), வாணியம்பாடியை சேர்ந்த தீபக்ஸ்ரீராம் (21), வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த சேதுராமன் (21) ஆகிய 4 பேரை ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தொடர் விசாரணையில், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலையில் வண்டலூர் ஊராட்சி தலைவி முத்தமிழ்செல்வி விஜயராஜ் (50) மற்றும் அவரது கார் ஓட்டுநரும், வண்டலூர் ஊராட்சி ஊழியருமான துரைராஜ் (37) ஆகியோர் முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் நேற்று கைது செய்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18ம்தேதி முத்தமிழ்செல்வியின் கணவர் விஜயராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது.

இந்த கொலையில் ஆராமுதனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் பின்னர் வண்டலூர் ஊராட்சி தலைவராக முத்தமிழ்செல்வி பதவி ஏற்ற பின்னர் ஆராமுதனுக்கும், முத்தமிழ்செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்கள் ஏற்பட்டு வந்ததாகவும், தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக தன்னை ஆராமுதன் வேலை செய்ய விடாமல் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வந்ததாகவும் தெரிய வந்தது.

ஆராமுதனை கொலை செய்ய திட்டமிட்டு அதற்கு தன்னுடைய கார் ஓட்டுநர் துரைராஜ் மூலம், விஜயராஜின் ஆதரவாளர்களான கொலையாளிகளுக்கு, முத்தமிழ்செல்வி பணம் கொடுத்து ஆராமுதனை கொலை செய்து கணவரின் கொலைக்கு பழிக்கு பழி தீர்த்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.