அடித்து உதைத்த கணவர் டார்ச்சர் தாங்காமல் பரிதாபமாக பலியான மனைவி!!

141

மார்த்தாண்டம் அருகே தினமும் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மகள் உயிரிழந்ததாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மேக்கனாம்விளையைச் சேர்ந்தவர் ஏசையா (68) இவரது மகள் ஜெயராணி (37). இவரது கணவர் காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த உழலந்தட்டுவிளையைச் சேர்ந்தவர் வின்ஸ்குமார்.

இவர் மெக்கானிக்காகவும், ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் ஜெயராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இரவு சாப்பிட்டுவிட்டு ஜெயராணி தூங்கச் சென்றார். நள்ளிரவில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மறுநாள் காலை ஜெயராணி எழுந்திருக்கவில்லை. கணவன் எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால், குளித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.


ஜெயராணியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையறிந்த ஏசையா அதிர்ச்சியில் மருத்துவமனைக்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து ஏசையா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் எனது மகள் ஜெயராணிக்கும், வின்ஸ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வின்ஸ்குமாரின் தந்தை ராஜாமணி மற்றும் தாய் செல்வபாய் தூண்டுதலின் பேரில் எனது மகளை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதனால் மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வின்ஸ்குமார் தாக்கியதால் ஜெயராணி உயிரிழந்தார். இதற்கு காரணமான வின்ஸ்குமார், அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்றார்.

வின்ஸ்குமார், ராஜாமணி, செல்வபாய் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராணியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது. வின்ஸ்குமார் தாக்கி ஜெயராணி இறந்தாரா? அல்லது நோயால் இறந்தாரா? என தெரியவரும். அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.