19 வயதில் வாழ்வை இழந்த பெண்.. குடிகார கணவனால் அரங்கேறிய கொடூரம்!!

399

மகாலட்சுமி….

மதுரை எம்கேபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்த குமார் – முனியம்மாள் தம்பதியின் மகள் மகாலட்சுமி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சந்தானகுமார் என்பவனுக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையானவன் என்று கூறப்படும் சந்தானகுமார், திருமணமான சில நாட்களிலேயே தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறான்.

திருமணமானபோது 19 வயதே நிரம்பி இருந்த மகாலட்சுமி, மதுப் பழக்கத்தைக் கைவிடுமாறு கணவனிடம் மன்றாடி இருக்கிறார். ஆனால் அவருடைய வேண்டுகோளை காதிலேயே வாங்கிக் கொள்ளாத சந்தானகுமார், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மகாலட்சுமியை அடித்து உதைப்பதை வழக்கமாக்கி இருக்கிறான்.

மகள் படும் துன்பம் பொறுக்காமல் ஒருநாள் சந்தானகுமாரின் வீட்டுக்கு வந்த மகாலட்சுமியின் பெற்றோர், அவனது செயல்களை கண்டித்துச் சென்றுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த சந்தானகுமார், அன்று இரவு மது குடித்துவிட்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த மகாலெட்மியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளான்.


மூச்சு வராமல் துடிதுடித்த மகாலட்சுமி ஓங்கித் தள்ளியதில் சற்றுத் தள்ளிச் சென்று விழுந்த சந்தானகுமார், பக்கத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து மகாலட்சுமியின் கழுத்தை நெரித்துள்ளான். இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, அங்கிருந்து சந்தானகுமார் தப்பிச் சென்றிருக்கிறான்.

கழுத்து நெறிக்கப்பட்டு, முகம் அழுத்தப்பட்டதில், மூக்கிலும் காதிலும் ரத்தம் கசிந்தவாறு துடித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் மட்டுமே காப்பாற்றப்பட்ட மகாலட்சுமியின் கை, கால்கள் மெல்ல மெல்ல செயலிழக்கத் துவங்கி, நடக்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மகாலட்சுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தானகுமார், பின் ஜாமீனில் வெளியே வந்துள்ளான். சில காலம் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியதாகக் கூறப்படும் சந்தானகுமார் அதன் பின்னர் அவரை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

நல்ல உடல்நிலையோடு திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த மகாலட்சுமி, இன்று உடல் செயல்பாடுகள் மொத்தமாக முடங்கி, ஒரு குழந்தையைப் போல் கையில் தூக்கி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

காலணிகள் தைக்கும் ஏழைக் கூலித் தொழிலாளியான மகாலட்சுமியின் தந்தை குமாரால் மகளுக்கான சிகிச்சைக்கு செலவிட முடியாத நிலையில், உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்துள்ளனர்.

குறைந்தபட்சம் 21 வயதைக் கடக்கும்போதுதான் ஒரு பெண்ணுக்கு இல்லற வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உடலும் மனமும் பக்குவப்படும். அதன் காரணமாகவே அந்த வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்க சட்டம் அறிவுறுத்துகிறது.

ஆனால் அறியாமை காரணமாக பதின் வயதில் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்கள் பலரது வாழ்க்கை இதுபோன்ற ஒரு சில கொடூரமான மனிதர்களால் சிதைக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.