ஊரடங்கை தளர்த்திய மாகாணம்… ஒரே நாளில் உச்சம் பெற்ற பாதிப்பு: கலக்கத்தில் நிர்வாகம்!!

952

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கடந்த 24 மணி நேரத்தில் 15,299 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.

இது மொத்த அமெரிக்காவின் தினசரி கொரோனா தொற்றுநோய் பாதிப்புகளில் கால் பகுதியாகும்.

அமெரிக்க மக்கள்தொகையில் வெறும் 7% மட்டுமே உள்ள புளோரிடா மாகாணம், கலிபோர்னியாவின் முந்தைய தினசரி கொரோனா தொற்று சாதனையை விஞ்சியுள்ளது.

மே மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கிய புளோரிடா, சுற்றுலா மற்றும் வயதான மக்கள் தொகை காரணமாக பாதிக்கப்படக்கூடியதாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, புளோரிடா மாகாணாம் ஒரு நாடாக இருந்திருந்தால், தற்போதைய சூழலில் உலகில் நான்காவது இடத்தில் இருந்திருக்கும். புளோரிடாவில் உள்ள 40 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், அவர்களின் தீவிர சிகிச்சை வசதிகள் முழுவதும் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கடந்த மாதம் மீண்டும் சில மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட போதிலும் புளோரிடாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உயர் ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபவுசி, மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவதை கடுமையாக விமர்சித்திருந்தார், நோய்த்தொற்றுகள் குறித்த தகவல்கள் இந்த நடவடிக்கையை ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

இருப்பினும் ஆளுநர் டிசாண்டிஸ் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க மறுத்துவிட்டார்.

மாஸ்க் பயன்பாட்டின் பிரச்சினை அமெரிக்காவில் மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது, அவற்றை அணிய வேண்டியது தனிப்பட்ட சுதந்திரத்தை ஆக்கிரமிக்கிறது என்று ஒரு சாரார் கூறியுள்ளனர்.

மாஸ்க் அணிய கட்டாயப்படுத்துவது மற்றும் பிற கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.