கடைசியாக மகளுடன் வீடியோ அழைப்பில்… அடுத்து நேர்ந்த துயரம்: தாயாரின் பிரிவு அறியாமல் இரண்டு வயது மகள்!!

687

அமெரிக்காவில் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய செவிலியர் கடைசியாக கேரளாவில் உள்ள தமது இரண்டு வயது மகளுடன் வீடியோ அழைப்பில் பேசியது தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவில் மோனிப்பள்ளி பகுதியில் உள்ள குடியிருப்பில் தமது தாயார் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அறியாமல் தூக்கத்தில் இருந்துள்ளது இரண்டு வயது குழந்தை நோரா.

அமெரிக்காவில் கணவரின் கையால் கொலை செய்யப்பட்ட மெரின் ஜாய் என்பவரின் மகள் தான் நோரா. ஜூலை 30 ஆம் திகதி மெரினின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் என கூறப்படுகிறது. ஆனால் நடந்த சம்பவத்தை அடுத்து மொத்த குடும்பவும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உறைந்து போயுள்ளது.

ஜாய் மற்றும் மெர்சியின் மகளான மெரின் அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் அன்பு பாராட்டி வந்துள்ளார். கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்னர் மெரின் கேரளாவில் உள்ள பெற்றோருக்கு வீடியோ அழைப்பு செய்துள்ளார்.


பெற்றோர் மற்றும் சகோதரியுடன் பேசிய அவர், மகளையும் கொஞ்சியுள்ளார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு மெரின் மரணமடைந்த தகவல் கிடைத்துள்ளது. சில மணி நேரம் முன்னர் தங்களிடம் பேசியவர் தற்போது இல்லை என்ற தகவல் மொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

2016-ல் பிலிப் மேத்யூ என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதன் பின்னரே இருவரும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெரின், பிலிப் மற்றும் நோரா குடும்பம் கேராளா வந்துள்ளனர். பிலிப்புடன் மெரினுக்கு கருத்துவேறுபாடு இருந்தது என கூறும் தந்தை ஜாய், ஆனால் புகார் அளிக்கும் வகையில் அது இருந்ததில்லை என்கிறார்.

கேரளாவில் திரும்பி வந்த 10 நாட்களில் பிலிப் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளார். ஆனால் ஜனவரி 12 ஆம் திகதி திரும்பிச் செல்ல விமான முன்பதிவு செய்திருந்தார்கள் என பின்னர் தெரியவந்தது.

இந்த நிலையில் மகள் நோராவை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, மெரின் ஜனவரி 29 ஆம் திகதி அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே மெரின் மற்றும் பிலிப் தம்பதி தனித்தனியாக வாழ்ந்து வருவதாக பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இருப்பினும் பிலிப்பிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்ததாக தங்களுக்கு தெரியவில்லை என மெரினின் தந்தை ஜாய் கூறுகிறார்.

வாரத்தில் சில நாட்கள் மெரின் வீடியோ அழைப்பில் தங்களை தொடர்பு கொள்வார் என கூறும் ஜாய், செவ்வாய்க்கிழமை பேசியது கடைசி அழைப்பு என ஒருபோதும் நினைத்திருக்கவில்லை என்கிறார்.