அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 54 பேர் உயிரிழப்பு – கரைகளில் ஒதுங்கும் உடல்கள்!

1110

துனீசியா அருகே, அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பலியானோர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான துனீசியா வழியாக, ஆப்பிரிக்க அகதிகளை, கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து செல்வது, கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது.இதுபோல் அகதிகளை அழைத்து சென்ற படகு, கடந்த வாரம், துனீசியா அருகே கடலில் மூழ்கியதில், பலியானோர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது.இவர்களின் உடல்களை தேடும் பணிகளில், துனீசியா மீட்பு படையினர், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இறந்தவர்களில், இரண்டு குழந்தைகள் மற்றும் 20 பேரின் உடல்கள், மத்திய தரைக்கடலில் உள்ள ஸ்பாக்ஸ் நகரின் அருகே, கெர்கென்னா தீவின் கடற்கரையோரமாக ஒதுங்கின.

மேலும், 19 பேரின் உடல்கள், நீரில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம், பெண்கள் உள்ளிட்ட, 13 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இதுகுறித்து, ஸ்பாக்ஸ் பகுதியின் சுகாதார இயக்குனர், அலி அயதி கூறியதாவது:ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு, அகதிகளை, சட்ட விரோதமாக படகுகளில் அழைத்து செல்லும் நடடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில், இதுபோல் பயணித்த, 140 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, படகு விபத்தில் சிக்கி இறந்தோரின் உடல்களை, தேடும் பணிகள் தொடர்கின்றன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடல்கள், ஸ்பாக்சில் அடக்கம் செய்யப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.