உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் யாரும் கவனிக்காமல் இருந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.
நாய் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டி, அதற்கு இருந்த நோயையும் குணப்படுத்தியுள்ளார். இதனால் வளர்ப்பு நாயான ஜெயா, டாக்டர் அனிதா ராஜா சிங் மீது மிகவும் பாசமுடன் பழகி வந்தது.
இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவால் அனிதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
அப்போது, தன்னை வளர்த்தவர் உயிரற்ற நிலையில் இருப்பதை கண்ட அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவன் செய்வதறியாமல் தவித்துள்ளது. உடனே வீட்டின் மாடிக்குச் சென்ற ஜெயா அங்கிருந்து கீழே குதித்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டது.
இது குறித்து டாக்டர் அனிதா ராஜ் சிங்கின் மகன் தேஜாஸ் “என்னுடைய அம்மா ஜெயாவை குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார்.
அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீழே குதித்தது. இதனால், காயங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவள் உயிரிழந்துவிட்டால்” என தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி அக்கம்பக்கத்தினர் இடையே வேகமாக பரவியது. வளர்த்தவருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட ஜெயாவை, அனிதா ராஜ் சிங் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே உறவினர்கள் புதைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.