கலவர பூமியான பெங்களூரு.. பேஸ்புக் பதிவால் வெடித்த பயங்கர வன்முறை: 3 பேர் படுகொலை!!

392

முகமது நபி குறித்து அவதூறான பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினரான நவீன் என்பவர் பதிவிட்டதாக கூறப்படும் பேஸ்புக் பதிவால் நேற்றிரவு பெங்களூரின் கிழக்கு பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேஸ்புக் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் முர்த்தியின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டதோடு, பல வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கு தீ வைக்க முயன்றுள்ளனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கே.ஜி.ஹல்லி காவல் நிலையம் மற்றும் டி.ஜே.ஹல்லி காவல் நிலையத்திற்கு சென்று அப்பகுதியை சூறையாடி, பொலிஸ்காரர்கள் மீது கற்களை வீசி, கார்களை எரித்தது.


கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியும் கூட்டம் கலைந்து செல்லாததால் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக்குண்டுகளை வீசியும் பொலிசார் கலைத்தனர். இந்த கலவரத்திற்கு காரணமாக சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை பதிவிட்ட நவீனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தனது போன் ஹேக் செய்யப்பட்டதாக நவீன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வன்முறையில் பொலிசார் பலர் காயமடைந்ததாகவும், இச்சம்பவத்தில் ஈடுபட 30 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

.டி.ஜே.ஹல்லி, கே.ஜி.ஹல்லி உள்ளிட்ட பெங்களூரில் பல பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.