மகாலட்சுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… அடுத்த 3 மாதங்களுக்கு கொலையாளி திட்டம் தீட்டியது அம்பலம்!!

116

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த மகாலட்சுமி கொலை வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கொலைகாரன் முக்தி ரஞ்சன் ராய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ள நிலையில், முக்தி ரஞ்சனின் டைரி போலீசாரிடம் சிக்கியுள்ளது.

ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவனுக்கு இல்லை என்றும், அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு முட்டாள்தனமான திட்டத்தை கொலையாளி வைத்திருந்தார் என்றும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக மகாலட்சுமியைக் கொன்று, 59 துண்டுகளாக கூறப்போடப்பட்ட நிலையில், அவற்றை எங்கே எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்த ஆயத்தங்களையும் ரஞ்சன் செய்திருந்தது தெரிய வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு எதுவும் தெரியாததைப் போல அமைதியாக சொந்த ஊரில் இருக்கப் போவதாகவும்,

உடலைக் கூறுப்போட்டு பிரிட்ஜுக்குள் வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசாது என்றும், மகாலட்சுமியின் கணவர் பிரிந்திருப்பதால் யாரும் அவரைத் தேட மாட்டார்கள் என்பதால், 3 மாத காலம் சென்ற பின்னர், பெங்களூரு சென்று மகாலட்சுமியின் உடல் துண்டுகளை அப்புறப்படுத்த நினைத்திருந்ததாகவும் கொலையாளியின் சகோதரரே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் முக்தி ரஞ்சன், வயாலிக்காவல் பகுதியில் மகாலட்சுமியைக் கொலைச் செய்தார். பின்னர் கொலையாளி மகாலட்சுமியின் உடலை 59 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பல நாட்களாக அந்த பிளாட் மூடியே கிடப்பதால், அங்கு இப்படி ஒரு குற்றம் நடந்ததாக அந்த பகுதியில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. பின்னர் செப்டம்பர் 21ம் தேதி அந்த குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மகாலட்சுமியின் தாயாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.


மகாலட்சுமியின் தாய் அங்கு சென்று பார்த்தபோது, ​​மகாலட்சுமி படுகொலைச் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் கொலையாளி பற்றி எந்த தகவலும் இல்லை.

போலீசார் விசாரணையை தொடங்கியபோது, ​​முதலில் மகாலட்சுமியின் கணவர் ஹேமந்த் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பிறகு, அஷ்ரப் என்ற நபருக்கும் மகாலட்சுமிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் அவர் மீது சந்தேகம் திரும்பியது.

ஆனால் இந்த வழக்கில் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைப் பின்னர் போலீசார் உறுதி செய்ததையடுத்து, விசாரணை விரிவடைந்தது. இரவு பகலாக விசாரணை நடத்தப்பட்டதில் போலீசாரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்து கொலையாளியை நெருங்கினார்கள்.

போலீசார் முக்தி ரஞ்சனை அடைவதற்குள், செப்டம்பர் 25ம் தேதி ஒடிசாவின் பத்ரக்கில் உள்ள கல்லறையில் தூக்குப்போட்டு ரஞ்சன் தற்கொலை செய்துகொண்டான். ஆனால் ரஞ்சன் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை என்று முக்தி ரஞ்சன் ராயின் சகோதரர் சத்யா போலீசாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து போலீசாரிடம் பேசிய சத்யா, “கடந்த 9 நாட்களாக முக்தி என்னுடன் தங்கியிருந்தார். அப்போது அவர் மகாலட்சுமியை கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டார். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவள் உடலின் துண்டுகளை மெதுவாக அங்கிருந்து அப்புறப்படுத்துவதாகவும், இதனால் யாருக்கும் எதுவும் தெரியாது என்றும் சொன்னார்.

ஆனால் முக்தியின் விவரம் எல்லாம் போலீசாருக்கு தெரிய வந்ததும் பயந்து போனான். போலீஸ் அவனை அடையாதபடி, முக்தி எதுவும் பேசாமல் செப்டம்பர் 25ம் தேதியன்று தனது சகோதரனின் வீட்டை விட்டு வெளியேறினார்.

மடிக்கணினியையும் டைரியையும் உடன் எடுத்துச் சென்ற அவன், தந்தையின் ஸ்கூட்டரில் தனது சகோதரர் வீட்டில் இருந்து புறப்பட்டார். மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஒரு கல்லறை இருந்தது. அங்கே ஸ்கூட்டரை நிறுத்தினான். பின்னர் உள்ளே சென்று மரத்தில் கயிற்றை கட்டி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

பின்னர், மயானத்துக்கு வந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். முதலில் அந்த நபர் யார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அன்றைய இரவில் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இது குறித்து ஒடிசா போலீசார் பெங்களூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை நடந்து வருகிறது.