ஃபேஸ்புக் பழக்கம் இரட்டை கொலையில் முடிந்தது… ஓராண்டுக்குப் பின் குற்றவாளி கைது!!

145

ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் ஓராண்டுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது மகன் ரோஹன்(13). இந்த நிலையில், விஜயபுராவைச் சேர்ந்த சாகர் நாயக் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணமான ஸ்ருதியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் சாகர் நாயக்கிற்கு காதலமாக மாறியது.

இதையடுத்து அவர்களது பழக்கம் நெருக்கமானது. இந்த நிலையில், ஸ்ருதியின் நடத்தையில் சாகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இதனால் கோபித்துக் கண்டு விஜயபுராவில் உள்ள சிந்தகி சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு சாகர் வந்தார். ஆனால், அவரை பிரிய மனமில்லாத ஸ்ருதி, தனது மகன் ரோஹனுடன் சாகரைத் தேடி விடுதிக்கு 2023 மார்ச் 13 அன்று வந்தார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஸ்ருதியை கழுத்தை நெரித்து சாகர் கொலை செய்தார்.

இதை நேரில் பார்த்த ரோஹன் வெளியே சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில் அவனையும் சாகர் கொலை செய்தார். இதன்பின் அவர்கள் இருவரது உடல்களையும் துணி மூட்டையில் கட்டி மகாராஷ்டிரா எல்லையில் உள்ள சித்தாபூர் கிராமத்தின் எல்லையில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சாகர் தலைமறைவானார்.


இதன்பின் ஒரு வாரம் கழித்து, பைகள் கிணற்றில் மிதந்தன. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த திருக்கோட்டை போலீஸார், இரண்டு சடலங்களை கண்டெடுத்தனர். ஆனால், உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ருதியும், அவரது மகனும் காணவில்லை என்று அவரது உறவினர்கள் மைசூரில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மைசூருவில் காணாமல் போகும் போது ஸ்ருதி, ரோஹன் அணிந்திருந்த உடைகள் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் இருந்த உடைகளும் ஒன்றாக இருந்தன.

இதையடுத்து ஸ்ருதியின் உறவினர்கள், இறந்த உடல்களைக் அடையாளம் கண்டு பிடித்தனர். இதனால் ஸ்ருதியின் செல்போன் தொடர்புகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஸ்ருதிக்கு சாகர் நாயக் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து போலீஸார் விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த ஊரக போலீஸார், சாகரை நேற்று இரவு கைது செய்தனர். ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணையும், அவரது மகனையும் கொலை செய்த வாலிபர் ஒரு வருடத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது