அக்காவை அடித்து வீட்டிற்கு அனுப்பிய மாமா.. குடிபோதையில் அடித்தே கொன்ற மைத்துனன்!!

143

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயபிரகாஷ் (40). இவருக்கு சியாமளா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜெயபிரகாஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல், மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயபிரகாஷ் சியாமளாவை தாக்கியுள்ளார். இதனால் அவரது நெற்றியில் தையல் போடப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சியாமளா, மகனுடன் தாய் வீட்டிற்கு சென்றார்.

கடந்த செவ்வாய்கிழமை மாலை தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்தார். பின்னர் அந்த இடத்தில் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் பெரியபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


அப்போது, இறந்த ஜெயபிரகாஷ் தனது மைத்துனர் அருளுடன் மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து அருளை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், தங்கையை அடித்த ஆத்திரத்தில் நண்பருடன் சேர்ந்து போதையில் இருந்த மாமாவை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து மைத்துனர் அருள் (37), அவரது நண்பர் முனியாண்டி (37) ஆகிய இருவரையும் பெரியபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.