அதிகளவில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

867

பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்..

எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன.

நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை பரப்ப ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இந்திய உணவு வகையாக இருக்கிறது பிரியாணி.

பிரியாணி என்றதும் வாயைப் பிளக்காதவர் என்று எவரும் கிடையாது. அந்தளவுக்கு பிரியாணி என்பது மிகவும் பிடித்தமான உணவும் கூட. இந்த பிரியாணியில் ஏகப்பட்ட வெரைட்டீஸ் இருக்குதாம். உலகளவில் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இருக்கிறது என்கிறார்கள் அதன் ரசிகர்கள்.


பிரியாணி… அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது.

பர்த்டே பார்ட்டி முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத கொண்டாட்டமே இல்லை.

தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான் முதலில் ஏற்படும். அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல. ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும்.

பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பிரியாணியால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்

வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

உடல்பருமன் : அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ் க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்கள் இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.