டிரெண்டிங் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அதிகரித்து வரும் தாய் – மகன் உறவை கொச்சைப்படுத்தும் வீடியோக்கள் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடும் கவலை எழுப்பி வந்ததன் மத்தியில், தற்போது இன்ஸ்டாகிராமுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
சேலஞ்ச், டிரெண்டிங் உள்ளிட்ட பெயர்களில், அவ்வப்போது விநோதமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதுண்டு. அவற்றில் பலதும் அநாகரீக மற்றும் அபத்தமானவை. அதில் ஒன்றாக அம்மா – மகன் பாசத்தை காட்டும் பதிவு என்ற பெயரில், இளம் அம்மாக்கள் தங்களது வளர்ந்த மகன்களுடன் அடிக்கும் லூட்டி காண்பவரை நெளிய வைக்கின்றன.
பதின்பருவத்து பூனை மீசையுடன் தென்படும் மகன், தனது இளம் தாயுடன் கெட்ட ஆட்டம் போடுகிறார். வளர்ந்த மகனுக்கு தாய் உதட்டு முத்தம் வைக்கிறார்.
சினிமா ஹீரோ ஹீரோயினை கையாள்வது போன்று தாயை அலாக்காக தூக்கி சிறுவன் விளையாடுகிறான். பாலிவுட் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க திரையில் காணும் அனைத்தையும் தாயும் மகனும் இன்ஸ்டா ரீல்ஸில் நடத்திக் காட்டுகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியான இந்த வீடியோக்கள் பின்னர் இதர சமூக வலைதளங்களிலும் தீயாய் பரவி வருகின்றன. வளர்ந்த மகனை பொதுவெளியில் கொஞ்சுவதன் மூலம், இளம் அம்மாக்கள் தங்களது இளமையை பறைசாற்ற இந்த வீடியோக்களை வாய்ப்பாக்கினார்கள்.
ஆனால் பார்வையாளர் மத்தியில் குறிப்பாக, முதிர்ச்சி அடையாத பதின்பருவத்தினர் மத்தியில் இந்த அநாகரீக வீடியோக்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
இது குறித்தான புகார்களின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதற்கு முன்னதாக நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட அநாகரீகமான செயல்களை சித்தரிக்கும் சவால் சேனல்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ கவலை தெரிவித்தார்.
யூடியூப்பில் வெளியான அந்த வீடியோக்கள் தொடர்பாக, யூடியூப் நிறுவனத்தின் இந்திய அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கையின் தலைவரான மீரா சாட் ஆணையத்தின் முன்பாக நேரில் ஆஜராகுமாறும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தாய் – மகன் கொச்சை வீடியோக்களை வெளியிட்டமைக்காக யூடியூப் இந்தியா மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலின் உரிமையாளார், டிரெண்டிங் தொகுப்பு என்ற பெயரில் தாய்-மகன் ’சவால் வீடியோக்களை’ வெளியிட்டதற்காக போக்சோவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
இவற்றின் அடுத்த கட்டமாக தற்போது இந்த வீடியோக்களை முதன்மையாக உருவாகும் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா ஆகியவைக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன.