அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோக சம்பவம்!!

172

நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது 11 வயது மகள் கனிஷ்கா, புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கனிஷ்கா சென்று இருந்தார். இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவி, திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அருகில் உள்ள வடிவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்து வந்ததும், அதற்காக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.