ஆட்டுக்குட்டியை விட குள்ளமான அதிசய பசு : பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம்!!

711

பசு..

வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது.

பூட்டான் நாட்டு இனமான ராணி வெறும் 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது.

இதன் உரிமையாளர், ராணியை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.இந்த பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ‘மாணிக்யம்’ என்ற வெச்சூர் இன (Vechur breed) பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.