9ம் வகுப்பு மாணவன் செய்துள்ள ஒரு காரியம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்றைய நவீன தலைமுறை மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். அவர்களின் அறிவு பசிக்கு இணையம் தீனி போடுகிறது. இணையத்தில் பல்வேறு விஷயங்களை தேடி, அறிவை வளர்த்து கொள்வதில், மாணவர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கிடைக்கின்ற நேரத்தை எல்லாம் அவர்கள் உபயோகமாக செலவழிகின்றனர்.
கேரளாவை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் அர்ஷத் இதற்கு நல்ல உதாரணம். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த நேரத்தை பயனுள்ளதாக செலவழித்துள்ளார் அர்ஷத். இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பதுடன், பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் தனது தந்தையின் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் இருந்து கிடைத்த ஸ்கிராப் மெட்டீரியல்களை பயன்படுத்தி, இலகு ரக மோட்டார்சைக்கிள் ஒன்றை அர்ஷத் தயாரித்துள்ளார். கொச்சியில் உள்ள பல்லூர்த்தி பகுதியை சேர்ந்த ஹசீம்-ஹசீனா தம்பதியரின் மகன்தான் அர்ஷத். இவர் பல்லூர்த்தியில் உள்ள எஸ்டிபிஒய் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஸ்கிராப் பாகங்களை ஒன்றாக சேர்த்து, புதுமையான மோட்டார்சைக்கிள் ஒன்றை அர்ஷத் தயாரித்துள்ளார். இதற்காக சுமார் ஒன்றரை மாதங்களை அவர் செலவிட்டுள்ளார். இந்த பைக்கில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட, பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த டேங்க்கை முழுமையாக நிரப்பினால், அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த பைக் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் என அர்ஷத் கூறியுள்ளார்.
மற்ற பைக்குகளின் ஸ்கிராப் டயர்கள், டிஸ்க் பிரேக்குகள், எல்இடி லைட்கள் மற்றும் ஹேண்டில்கள் மூலமும், சைக்கிள்களின் கேரியர் மற்றும் இருக்கை மூலமும் இந்த இலகு ரக மோட்டார்சைக்கிளை அர்ஷத் தயார் செய்துள்ளார். இதற்காக அவர் சுமார் 10 ஆயிரம் ரூபாயை செலவிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அர்ஷத் கூறுகையில், ”ஊரடங்கின்போது எனது தந்தையின் ஒர்க்ஷாப்பில் இருந்த ஒரு பைக்கின் இன்ஜின் மற்றும் இரும்பு பைப்பை பார்த்தபோது, சுயமாக ஒரு பைக்கை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தேன். முதலில் எனது தந்தை என்னை திட்டினார். ஆனால் பாதி வேலைகள் முடிந்த பின், அவர் உதவி செய்தார்.
ஒன்றரை மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. பல பைக்குகளின் பாகங்களை பயன்படுத்தி இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளேன்” என்றார். அதே சமயம் அர்ஷத்தின் தந்தை ஹசீமோ, தனது மகன் பைக் உருவாக்கியதை நினைத்து பெருமைப்படுவதாகவும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹசீம் கூறுகையில், ”ஊரடங்கில் வீட்டில் இருந்தபோது, சைக்கிள் போன்று தோற்றமளிக்கும் ஒரு பைக்கை உருவாக்க முடியுமா? என்று அர்ஷத் கேட்டார். எனது நண்பர் ஒருவர் அவருக்கு வெல்டிங் மெஷின் கொடுத்து உதவி செய்தார். எனது மகன் உருவாக்கிய பைக் இவ்வளவு நன்றாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
எனது மகனின் எதிர்கால முயற்சிகளுக்கு என்னால் முடிந்த வரைக்கும் ஆதரவு அளிப்பேன்” என்றார். அர்ஷத் உருவாக்கியுள்ள மோட்டார்சைக்கிள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக அர்ஷத் பாராட்டுக்களை பெற்று வருகிறார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஊரடங்கில் பொழுதை கழிக்காமல், உபயோகமாக ஒரு விஷயத்தை செய்த அர்ஷத் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்தான்.