உணவில் விஷம் கலந்து காதல் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் : மாரடைப்பு நாடகம் அம்பலம்!!

1241

கர்நாடகா….

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூருவில் உள்ள முடிகெரே தாலுகாவில் உள்ள தேவவிருந்தாவைச் சேர்ந்தவர் தர்ஷன். இவர் கல்லூரியில் படித்த போது ஸ்வேதா என்பவரை காதலித்து வவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தர்ஷன், ஸ்வேதா இணைந்து பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே ட்ரூ மெடிக்ஸ் லேப் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கணவரைப் பிரிந்த பெண்ணுடன் தர்ஷனுக்குத் தகாத உறவு ஏற்பட்டது. இதை ஸ்வேதா கண்டித்துள்ளார். இதனால் அந்த பெண்ணுடனான தொடர்பை விட்டு விடுவதாக தர்ஷன் கூறியுள்ளார். ஆனாலும், பல பெண்களிடம் தர்ஷன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தேவவிருந்தா கிராமத்தில் உள்ள தர்ஷன் வீட்டிற்கு ஸ்வேதா(31) நான்கு நாட்களுக்கு முன் வந்தார். நேற்று திடீரென ஸ்வேதா மரணடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக தர்ஷன் கூறி கதறி அழுதுள்ளார். அத்துடன் ஸ்வேதாவை அடக்கம் செய்வதற்காக நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்.


ஆனால், தங்கள் மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக ஸ்வேதா குடும்பத்தினர் கோனிபிடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்வேதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஸ்வேதா உடலில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. அவருக்கு விஷ ஊசி போட்டுக் கொலை செய்திருக்கலாம் என போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து தர்ஷனை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராகி உருண்டையில் சயனைடு கலந்து கொடுத்து ஸ்வேதாவை கொலை செய்ததை தர்ஷன் ஒத்துக் கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” முறைகேடான உறவைத் தெரிந்து தன் மானத்தைப் பறித்த மனைவியைக் கொலை செய்ய தர்ஷன் திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஸ்வேதா சாப்பிட்ட உணவில் சயனைடு கலந்துள்ளார். இதனால் ஸ்வேதா காலையில் படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்தது போல கதறி அழுதுள்ளார்” என்றனர்.

இதையடுத்து தர்ஷனை கோனிபிடு போலீஸார் இன்று கைது செய்தனர். காதல் மனைவியை கொலை செய்து விட்டு, மாரடைப்பால் இறந்ததாக கணவனே நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.