உண்மை அலசல்: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா?

1021

ஊரடங்கு காலத்தில் 1200+ கி.மீ தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் 8ம் வகுப்புப் பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி.

இதையடுத்து தங்களிடம் இருந்த சொற்பக் காசை வைத்து அப்பகுதியில் ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார்கள்.

குருகிராமிலிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் பீகாரில் இருக்கும் தங்கள் கிராமத்துக்குத் தந்தையும் மகளுமாகக் கடந்த 10ம் திகதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.


காயமடைந்த தனது தந்தையை சைக்கிளின் பின்னால் இருக்கையில் அமரவைத்து ஒரு பையுடன் 7 நாள்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கடந்த 16ம் திகதி பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை அடைந்தனர்.

வழியில் கிடைத்த இடத்தில் ஓய்வு, உணவு என இடைவிடாமல் பயணித்து தந்தையைப் பத்திரமாக ஊர் சேர்த்திருக்கிறார் அந்த இரும்பு மனுஷி.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியாக இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பாராட்டுகளை பெற்றார் ஜோதி.

இந்நிலையில், இந்தப்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்தப் பெண்ணின் படத்துடன் பலரும் ட்விட்டரில் பகிர்ந்தனர், அது உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

அவருடைய பெயரும் ஜோதி என்பதால் தவறாக புகைப்படம் பரவி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

யார் அந்த சிறுமி?
மாம்பழங்களைத் திருடிய குற்றத்துக்காக வன்கொடுமை செய்யப்ப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் இந்த 14வயது சிறுமியான ஜோதி.

இதில் குற்றவாளியான அர்ஜூன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றத்தில் அர்ஜூனின் மனைவியும் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.