ஒவ்வொரு தவணைக்கும் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு… நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

272

மயிலாடுதுறை….

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள காளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி வயது 36. இவரின் கணவர் பாஸ்கர் வயது 40. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன், மூன்றரை வயதில் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பாஸ்கர் கூலி வேலை செய்துவருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு மூன்று தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுக்கடன் பெற்று சிறிய அளவிலான வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார் மாலதி. பாஸ்கர் வேலைக்குச் செல்வதில் கிடைக்கும் சம்பளத்தைக்கொண்டு, வாங்கிய கடனுக்கான தவணையை சரியாகச் செலுத்திவந்திருக்கிறார். இதையடுத்து மாலதி மேலும் சில தனியார் நிதி நிறுவனங்களில் குழுக்கடன் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மயிலாடுதுறைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவந்ததால், பாஸ்கருக்கு வேலை இல்லாமல் போனது. இதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் குழுக்கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், தவணைப் பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்திருக்கின்றனர். இதில் மாலதியும் பாஸ்கரும் கடன் வாங்கி இரண்டு நிதி நிறுவனங்களுக்கு மட்டும் தவணை செலுத்தியிருக்கின்றனர்.


இதைத் தொடர்ந்து குத்தாலத்தில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், நேற்று காலை 11 மணியளவில் மாலதி வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, `மழை பெய்ததில் வீட்டுகாரருக்கு வேலை இல்லை.

வேலைக்குப் போனதும் வாங்கிய கடனை நாணயமாகக் கொடுத்துவிடுகிறேன்’ என மாலதி கூறியிருக்கிறார். அதற்கு, `கொடுக்க முடியாத நீ, ஏன் கடன் வாங்குகிறாய்… உனக்கு வீடெல்லாம் ஒரு கேடா…’ எனக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சூழ்ந்து நிற்க, தகாத வார்த்தைகளில் மாலதியைத் திட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

இதில் மனமுடைந்த மாலதி, வாசலில் விளையாடிக்கொண்டிருந்த மூன்றரை வயது மகன் இனியனைக்கூட நினைத்துப் பார்க்காமல், வீட்டுக்குள் சென்று, தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். தாய் இறந்தது தெரியாமல் இனியன் வாசலில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். மாலதி வெகு நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்ததில் மாலதி தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு வந்த அவரின் கணவர் பாஸ்கர், “ஒவ்வொரு தவணை செலுத்துவதற்கான தேதி வரும்போதும், செத்துப் பிழைக்கவேண்டியிருக்கு. பணம் கட்டவில்லை என்றால், இரக்கமே இல்லாமல் மானம் போற மாதிரி திட்டுறாங்க. வாங்கியிருக்கிற கடனைக் கொடுத்துவிட்டு, இனி தனியார் நிதி நிறுவனத்தில் குழுக்கடனே வாங்கக் கூடாது எனச் சொல்லிக்கொண்டிருந்தாய்… நானும் இனி கடன் வாங்க வேண்டாம் என்றேன்.

பணத்துக்காக மானம் போகக் கூடாதுனு எங்களை நினைத்துப் பார்க்காமல் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாயே…” என மாலதியின் உடலைக் கட்டியணைத்துக்கொண்டு கதறியது, சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணல்மேடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.