கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

174

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனவேல் (40). மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இவர் குடிபோதையில் இருக்கும்போதெல்லாம் சாப்பிடாமல் படுத்துக்கொள்வார். அதைப்போல கடந்த 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் குடித்துவிட்டு தன் வீட்டில் படுத்துக்கொண்டவரை மறுநாள் காலை அவரது மனைவி அருள்மொழி (33) எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து இறந்துபோன தனவேலின் தம்பி கருப்பன் (39) புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆராய்ந்தனர். அப்போது அந்த தெருவில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணி கட்டிக்கொண்டு நடமாடியது தெரிந்தது.

இதையடுத்து அருள்மொழியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அருள்மொழியும், கச்சிராயபாளையத்தை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கச்சிராயபாளையம் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், அருள்மொழி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும், என் கணவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக என் கணவர் குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனம் வெறுத்த நான் என் கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது கள்ளக்காதலன் சரவணனை நள்ளிரவில் வரவழைத்தேன்.

அவர் தூங்கிக்கொண்டிருந்த எனது கணவரின் காலைப்பிடித்துக்கொள்ள, நான் தலையணையால் கணவரின் முகத்தில் அழுத்தினேன். இதில் அவர் மூச்சு திணறி இறந்து விட்டார்.

பின்னர் நான் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட்டேன். இதன் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு போலீசார் தீவிரமாக விசாரித்தபோது நான் உண்மையை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.