காதலிக்கு எஸ்.ஐ டிரெஸ் போட்டு மாமூல் வேட்டை.. கோடிகளில் வசூல் செய்த காதல் ஜோடி!!

218

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் 45 வயதான ஹனுமந்த் ரமேஷ். சி.ஆர்.பி.எப் போலிஸ் அதிகாரியான இவர் ஒழுங்கீனம் காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சொந்தஊரான பெந்துர்த்திக்கு சென்ற ரமேஷ் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலர்கள் இருவருக்கும் தங்களது உல்லாச வாழ்க்கைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு என்ன செய்வதென்று யோசித்தவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக திட்டம் தீட்டியவர்கள் பணம் சம்பாதிக்க குறுக்கு வழி ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

அதன்படி காதலிக்கு எஸ்.ஐ. சீருடை ஒன்று வாங்கி அணிவித்து அவரை நிஜ போலீஸ் போன்று அலங்கரித்தள்ளார். பின் காதலியை பல இடங்களுக்கு பைக்கில் அழைத்துச் சென்று வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் ரமேஷ். ரோட்டோரக் கடைகள், மளிகைக்கடைகள், இருசக்கரவாகனங்களில் செல்வோர் என கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் வசூல் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி வேலையில்லா இளைஞர்களுக்கு ரயில்வே போலீஸ் மற்றும் காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 30 பேரிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். பணம் கொடுத்த இளைஞர்களுக்கும் பல மாதங்களுக்குப் பிறகே இவர்கள் மோசடி பேர்வழிகள் என்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவிக்க, போலீசார் ரகசியமாக காதலர்களை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஆதாரங்களை சேகரித்த போலீசார் ஹைதராபாத்தில் சுற்றித்திரிந்த காதலர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

விசாரணையின் போது வேறு சில திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தன. ரமேசுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை கைவிட்டு விட்டு பல ஆண்டுகளாக காதலியுடன் தனியாக வசித்துவருவதும் அம்பலமானது


போலீஸ் சீருடையில் 2 பேரும் வசூல் வேட்டையில் ஈடுபடும் போது பொம்மை துப்பாக்கிகளை காட்டி பலரை மிரட்டி பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் வேறு யாரிடமெல்லாம் பணம் பறித்துள்ளனர். இவர்களால் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

காதலிக்கு போலீஸ் சீருடை அணிந்து மாமூல் வசூலித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.