காதல் திருமணம் செய்த இளம்பெண் நடுரோட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட சோகம்!!

22

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே காதல் திருமணம் செய்த பெண் தன்னுடன் பழக்கத்தை தொடரவில்லை என்ற ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் இளம்பெண்ணைக் குத்திக் கொலைச் செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள அகரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரலிங்கம் (42). இவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கியிருந்து வெல்டிங் வேலை செய்து வந்தார்.

அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் மேல உதயத்தூரை சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த தேவிகலா (37) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் தம்பதியினர் அகரத்தில் குடியேறினர்.

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இதே ஊரை சேர்ந்த பட்டுத்துரை மகன் லிங்கராஜா (24) என்பவருடன் தேவிகலா கடந்த 2 ஆண்டுகளாக பேசி வந்துள்ளார். சமீப காலமாக லிங்கராஜா பேச்சு சரியில்லாததால் அவருடன் பேசுவதை தேவிகலா நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் தேவிகலா தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அபோது அங்கு பைக்கில் வந்த லிங்கராஜா, என்னுடன் ஏன் பேசுவதில்லை என தேவிகலாவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அவர் சரியாக பதில் சொல்லாத நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த லிங்கராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவிகலாவை சரமாரியாக குத்தினார்.


அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதையடுத்து லிங்கராஜா பைக்கில் தப்பினார். பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவிகலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐ பழனிசாமி மற்றும் போலீசார் சென்று தேவிகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து சந்திரலிங்கம் ஏரல் போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் ஏரல் எஸ்ஐ முகமதுரபீக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு லிங்கராஜை தேடி வருகின்றனர்.