காதல் விவகாரத்தில் விபரீதம் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!!

187

கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதி கட்டிடத்தின் 4-வது மாடிக்குச் சென்ற அவர் திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் மாணவி பபிஷா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடைபெறுகிறது. மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.