நெல்லையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் – மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகர் (24) கூலி வேலை செய்யும் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த புனிதா (18) என்ற பெண்ணை காதலித்து, குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புனிதா பிரபாகரனின் அண்ணன் மகள் என்றும், புனிதாவிற்கு சித்தப்பா முறை வரும் எனவும் கூறப்படுகிறது. முறை தவறி காதலித்து திருமணம் செய்த இருவரையும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் திசையன்விளை அருகே உள்ள எருமைகுளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். கணவர் பிரபாகருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் நேற்றும் இரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி புனிதா மன விரக்தியில் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் புனிதாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி இறந்த நிலையில் கணவர் பிரபாகரன் மனைவி புனிதா இறந்து விட்டதாகவும், தானும் விஷம் குடித்து இறக்கப் போவதாகவும் உவரியில் உள்ள தனது அண்ணனுக்கு போன் செய்து கூறியுள்ளார். இது குறித்து அவரது அண்ணன் திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் சொல்ல நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அவரைத் தேடி வந்துள்ளனர்.
நேற்று இரவு அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை திசையன்விளை – உவரி புறவழிச்சாலை அருகே சுடுகாட்டுப் பகுதியில் உள்ள தெற்கு ஓடைக்கரை சுடலைமாடசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் ஒருவர் சடலமாக கிடப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரித்த போது அவரது உடலுக்கு அருகில் ஒரு செல்போனும், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களும் கிடந்துள்ளது.
தொடர்ந்து நேற்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தொலைபேசியில் தெரிவித்த பிரபு என்ற பிரபாகரின் சடலம்தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்த நிலையில் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் – மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.