குடும்பத் தகராறில் விபரீதம்.. மருமகள் தற்கொலை… வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் மாமனார், மாமியார் பலி!!

280

உத்தரப் பிரதேசத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கணவர் வீட்டிற்கு தீ வைத்ததில் மாமனார், மாமியார் உடல்கருகி உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள முத்திகஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அன்ஷிகா கேசர்வானி என்ற 27 வயது இளம்பெண், குடும்பத் தகராறு காரணமாக நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் வந்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்கள் மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு விட்டதாக மாமனார் ராஜேந்திர கேசர்வானி (65), மாமியார் ஷோபா தேவி (62) ஆகியோர் மீது பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

அப்போது ஆத்திரமடைந்த, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அவரது மாமியார் வீட்டிற்கு தீ வைத்தனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.


மேலும் தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் ராஜேந்திர கேசர்வானி, ஷோபா தேவி ஆகிய இருவரும் தீயில் கருகி இறந்தனர்.

மேலும், படுகாயமடைந்த அவர்களது மகன் ராஜேந்திரா, பேத்தி ஷிவானி, மற்றொரு மருமகள் லவ்லி கேசர்வானி ஆகிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்திகஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், வீட்டுக்கு தீ வைத்து, கணவரின் பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.