குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்!!

120

போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய கணவனை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி அடுத்த வெள்ளிமலை பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து(40). கூலித்தொழிலாளியான இவரது மனைவி சீதா(36). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

உறவினர்கள் அவர்களை சமதானம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2 வருடமாக கணவனை பிரிந்த சீதா, தனது குழந்தைகளுடன் செங்கழநீர்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

சின்னமுத்து தன்னுடன் வந்து சேர்ந்து வாழும்படி சீதாவிற்கு அடிக்கடி போன் செய்து சண்டை போட்டுள்ளார். ஆனால், சீதா வரமறுத்துவிட்டார். நேற்று முன்தினம் சின்னமுத்து செங்கழநீர்பட்டிக்கு சென்றுள்ளார்.

பின்னர், மதுபோதையில் மனைவியை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால், வழக்கம்போல் சீதா மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, தனது அக்கா மகன் வேடியப்பன் என்பவரிடம் இருவரும் சென்று பேசிவிட்டு, வீட்டிற்கு போகலாம் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் வேடியப்பன் வேலை செய்து வரும் மாந்தோப்புக்கு சென்றுள்ளனர். அங்கு, வேடியப்பன் இல்லை.


இதனால், இருவரும் அங்கேயே தங்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் வேடியப்பன் வராததால், நாம் வீட்டுக்கு போகலாம். மற்றொரு நாள் வந்து வேடியப்பனை பார்த்துக்கொள்ளலாம் என சின்னமுத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், வேடியப்பன் வந்ததும் அவரிடம் பேசிவிட்டுத்தான் வருவேன் என சீதா தெரிவித்ததால், மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சின்னமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சீதாவின் வயிற்றில் சரமாரி குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சீதா துடி துடித்து உயிழந்தார். பின்னர் சின்னமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். நேற்று அதிகாலை மாந்தோப்புக்கு வந்த வேடியப்பன், சீதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சீதாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடி சின்னமுத்துவை, பர்கூர் டிஎஸ்பி பிரித்விராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.