திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (25). இவருக்கும் சத்யா (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 8 மாதமே நிறைவடையாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்த நிலையில், ரமேஷ் தீச்சட்டி வேண்டுதலுக்காக கோவிலுக்கு சென்றார். அப்போது சத்யாவும் குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டில் இருந்தபோது கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து குழந்தை காணவில்லை என அலறி துடித்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் போலீசார் அருகில் உள்ள கிணற்றில் குழந்தையை சடலமாக மீட்டனர்.
இதையடுத்து சோழவரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, குழந்தையை மறைத்து வைத்திருந்த தாய் சத்யா, கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து சோழவரம் போலீசார் சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, “ குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை எடை குறைவாக உள்ளது.
இதனால், எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளியாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. மேலும், எனக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. இதையெல்லாம் தவிர்த்து என் கணவர் என்னை விட குழந்தை மீது அதிக பாசம் காட்ட ஆரம்பித்தார்.
இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றேன்,” என தாய் சத்யா தெரிவித்தார். இதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.