குவைத் நாட்டிலிருந்து காதலன் போட்டஸ் கெட்ச்.. கணவனைக் கொலைசெய்து விபத்தாக மாற்றிய மனைவி!!

486

கடலூரறில்..

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் – மேல வன்னியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையில், விபத்தில் அடிப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, குமராட்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். அதில் சடலமாகக் கிடந்தவர், மேல வன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மாமல்லன் என்பதும்,

அவர் நெடும்பூர் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக டேங்க் ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான மாமல்லனுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

விபத்து குறித்த தகவலைக் கேட்டு வந்த மாமல்லனின் சகோதரர்கள், தங்கள் அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்த அதிகமான ரத்தப்போக்கையும், மாமல்லனின் பின் தலையில் இருந்த பலமான காயத்தைப் பார்த்தும் கையைப் பிசைந்து கொண்டிருந்த போலீஸார், அவர்கள் கூறிய புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.


அதையடுத்து மாமல்லனின் சகோதரர் இளமதி கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து டி.எஸ்.பி ரூபன் குமார் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, மாமல்லனின் மனைவி, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது மாமல்லனின் மனைவி அளித்த பதில்கள் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதனால் அவரிடம் மட்டும் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, குவைத்திலிருந்து காதலன் போட்டுக் கொடுத்த திட்டப்படி, அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கணவனைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.

நாகலட்சுமி கொடுத்த வாக்குமூலம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “மாமல்லன் மனைவி நாகலட்சுமிக்கும், அவரைவிட 20 வயது குறைவான, அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த பழக்கம், நாளடைவில் திருமண உறவை தாண்டிய நட்பாக மாறியிருக்கிறது. இருவரும் தங்கள் வீட்டிலும், அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று, லாட்ஜில் அறை எடுத்தும் தனிமையில் சந்தித்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் மாமல்லனுக்குத் தெரியவந்ததால், மனைவியைக் கண்டித்த அவர், மேல வன்னியர் கிராமத்திலிருந்து குடும்பத்துடன் வெளியேறி, சிதம்பரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அப்போது, `வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதித்துக் கொண்டு வந்து, உன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு,

குவைத்துக்குச் சென்றார் தங்கபாண்டியன். ஆனால் அதன் பிறகும், நாகலட்சுமியும், தங்கபாண்டியனும் வாட்ஸ்-அப் கால் மற்றும் நிர்வாண சாட்டிங் செய்து வந்திருக்கின்றனர். அதையும் கண்டுபிடித்த மாமல்லன், நாகலட்சுமியைக் கண்டித்திருக்கிறார்.

அப்படியும் அவர் கேட்காததால், நாகலட்சுமியின் செல்போனை வாங்கி உடைத்திருக்கிறார். ஆனால் திரும்பவும் தங்கபாண்டியன் மூலம் புதிய செல்போன் வாங்கி, அவருடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் நாகலட்சுமி. அந்த செல்போனையும் வாங்கி உடைத்திருக்கிறார் மாமல்லன்.

இப்படி இதுவரை நான்கு செல்போன்களை உடைத்திருக்கிறார் மாமல்லன். இந்த விவகாரத்தில் இருவருக்குமிடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் மன உளைச்சலுக்கு ஆளான நாகலட்சுமி, `அவர் தினமும் பிரச்னை செய்கிறார். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், அவர் இருக்கவே கூடாது’ என்று குவைத்திலிருந்த தங்கபாண்டியனிடம் கூறியிருக்கிறார்.

அதையடுத்து தன்னுடைய நண்பர்களான கண்டமங்கலத்தைச் சேர்ந்த மெக்கானிக் இளவேந்தன், அதே ஊரைச் சேர்ந்த சட்டப் படிப்பு மாணவர் ராஜகுரு உள்ளிட்டவர்களிடம் மாமல்லனைக் கொலைசெய்வது குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர்களும் அதற்கு ஒப்புக்கொள்ள, தங்கபாண்டியன், நாகலட்சுமி, இளவேந்தன், ராஜகுரு உள்ளிட்ட நான்கு பேரும், மாமல்லனை எப்படி கொலைசெய்யலாம் என தினமும் வாட்ஸ்-அப் காலில் திட்டமிட்டிருக்கின்றனர். அப்போது, `மாமல்லன் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்லும்போது,

தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு, விபத்தாக மாற்றி விடலாம். சட்டம் தெரிந்த எனக்கு, கொலையை விபத்தாக மாற்றுவது எளிது’ என்று கூறியிருக்கிறார் ராஜகுரு. அனைவருக்கும் அந்த யோசனை சரியென்று தோன்றவே, அந்த யோசனையை செயல்படுத்த முடிவெடுத்தனர்.

அதன்படி கடந்த 19-ம் தேதி வழக்கம்போல் அதிகாலை 5:00 மணிக்கு மாமல்லன் நெடும்பூர் கிராமத்திற்குச் செல்லும்போது, மேல வன்னியூர் அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி பின் மண்டையில் இளவேந்தன், ராஜகுரு ஆகிய இருவரும் தாக்கியுள்ளனர்.

அதில் சுருண்டு கீழே விழுந்த மாமல்லன், துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். அதையடுத்து ராஜகுரு, தனது சட்டப் படிப்பை பயன்படுத்தி, அதை விபத்தைப்போல செட்டப் செய்திருக்கிறார். அதன் பிறகு தங்கபாண்டியனுக்கும், அவரின் காதலி நாகலட்சுமிக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

வேலை கச்சிதமாக முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த அனைவரும், எங்கள் விசாரணையில் சிக்கிக் கொண்டனர். சந்தேக வழக்கை கொலை வழக்காக மாற்றி, நாகலட்சுமி, இளவேந்தன், ராஜகுரு ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தங்கபாண்டியனை, இந்திய தூதரகம் வாயிலாக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து கைதுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றனர்.