கொரோனா பரவல் காரணத்தால் அதிரடி: 80,000 பேரை உடனடியாக வெளியேற்றும் நகரம்!

949

வியட்நாம் நகரமொன்றில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 80,000 பேரை அதிரடியாக வெளியேற்ற முடிவுசெய்துள்ளது அந்நாடு.

வியட்நாமின் Da Nang நகரில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்படதைத் தொடர்ந்து, அந்நகரத்திலிருந்து 80,000 பேர் வெளியேற்றப்படுகின்றனர்.

வியட்நாமில் சமூக பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது.

நாட்டின் எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில், குறைவான விலையில் விமான டிக்கெட்கள், ஹொட்டல்களில் தங்கும் வசதி ஆகியவை கிடைப்பதால், உள்ளூர் மக்கள், உள்ளூர் விமானங்களில், நாட்டின் பிற நகரங்களுக்கு சுற்றுலா புறப்பட்டதன் விளைவாகவே இந்த தொற்று பரவல் தொடங்கியுள்ளது.


நான்கு நாட்கள், நாளொன்றிற்கு 100 விமானங்கள், விமானம் ஒன்றில் 2,000 பேர், என Da Nang நகரிலிருந்து 11 வியட்நாம் நகரங்களுக்கு மக்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

அப்படி Da Nang நகரிலிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கு மக்கள் சென்றாலும், அவர்களும் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், மத்திய மாகாணமான Quang Ngaiயைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவன், Da Nangஐச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவர் மற்றும் 61 வயது ஆண் ஒருவர் ஆவர்.

மீண்டும் கொரோன பரவாமல் தடுப்பதற்காகவே நாடு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தொடர்ந்து 99 நாட்களாக வியட்நாமில் கொரோனா தொற்றே இல்லாத நிலையில், கடந்த சனிக்கிழமையன்று ஒருவருக்கு மீண்டும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

வியட்நாமில் இதுவரை மொத்தம் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.