கொலைகாரனாக மாறிய தீயணைப்பு வீரர்.. ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்!!

371

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குப்பச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சண்முகம், நல்லம்மாள் தம்பதியினர். முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். அக்டோபர் 12ம் தேதி, இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததாக தெரிகிறது. இதில் நல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த ரொக்கம், நகைகள் மற்றும் நல்லம்மாள் கழுத்தில் கிடந்த நகைகள் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தீயணைப்புத்துறை அதிகாரி ஜனார்த்தனன் மீது சந்தேகம் எழுந்தது.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜனார்த்தனன் மொபைல் செயலிகள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் பெரிய அளவில் பணத்தை இழந்ததால் பலரிடமும் கடன் வாங்கத் தொடங்கினார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஜனார்த்தனன் பணத்தை திருடத் தொடங்கினார். பரமத்தி மேலூர் பகுதியில் தம்பதிகள் இருவரும் தனியாக இருப்பதை அறிந்து கொண்டார்.

அங்கு சென்ற ஜனார்த்தனன், இருவரையும் அடித்து காயப்படுத்தி விட்டு நகைகளை எடுத்துச் செல்ல திட்டமிட்டார். இருவரும் கூச்சலிடவே ஆத்திரத்தில் அவர்கள் இருவரையும் கடப்பாரையால் அடித்துள்ளார். அத்துடன் நல்லம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சண்முகம் இறந்ததாக நினைத்து ஜனார்த்தனன் நகைகளுடன் மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து ஜனார்த்தனனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். தீயணைப்புத் துறையில் பணிபுரியும் அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கொலைகாரனாகவும் மாறி சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.