தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதால், தீயிலிருந்து தப்ப தங்கள் இரண்டு மாதக் குழந்தையுடன் ஏழாவது மாடியிலிருந்து குதித்தார்கள் ஒரு தம்பதியர்.
பிரேசில் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஏழாவது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள் லூயிஸ் (Luiz Evaldo Lima, 28) கிரேசியேன் (Graciane Rosa de Oliveira, 35) தம்பதியர்.
செவ்வாயன்று, தம்பதியர் வாழ்ந்துவந்த குடியிருப்பில் தீப்பற்றியுள்ளது. தீயின் உக்கிரம் அதிகரிக்கவே, ஜன்னல் வழியாக கீழே குதிக்க முடிவு செய்துள்ளார்கள் தம்பதியர்.
கீழே நின்றவர்கள் குதிக்கவேண்டாம் என சத்தமிட, அதற்குள் தீ வேகமாக பரவ, தங்கள் இரண்டுமாதக் குழந்தை Léo Oliveira de Limaவை கட்டியணைத்தபடி தம்பதியர் கீழே குதித்துள்ளார்கள்.
ஏழாவது மாடிலியிலிருந்து கீழே விழுந்த வேகத்தில் மூன்று பேரும் பலியாகிவிட்டார்கள். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
தம்பதியரின் மூத்த குழந்தை, ஏழு வயது மகள், அவர்களுடைய வீடு தீப்பற்றியபோது பள்ளிக்குச் சென்றிருந்ததால் உயிர் பிழைத்துள்ளாள்.
அந்தச் சிறுமி தற்போது தன் தாத்தா பாட்டி வீட்டில் இருக்கிறாள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.