திருப்பூர்…
திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு பாறைக்குழியில் பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த சடலம் தொடர்பான புகைப்படங்களை காவல் நிலையங்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த காவல்துறையினர் மாயமான ஆண்கள் குறித்த தகவல் இருந்தால் சொல்லும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் 3 தினங்களாக மாயமானது தெரியவந்தது.
அவர் காணாமல் போன அன்று அவருடன் வேலை பார்த்து வரும் முருகேஸ்வரி என்ற பெண்ணின் மகனுடன் வெளியில் சென்றது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் திருப்பூரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு முருகேஸ்வரி தனது மகன் ஆரோக்கிய தாசுடன் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சென்றதாக கூறப்பட்டதால் அங்கு சென்று தாய் மற்றும் மகனை பிடித்து விசாரித்த போது சடலத்துடன் திருப்பூரில் நள்ளிரவில் நகர்வலம் சென்ற திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
ஒரே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததால் பழக்கமான சந்தோஷ்குமார், முருகேஸ்வரிக்கு தேவையான நேரங்களில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். கணவர் தேனியில் இருக்கும் நிலையில் மகனுடன் திருப்பூரில் தங்கி வேலைபார்த்து வந்த முருகேஸ்வரியை சந்தோஷ்குமார் பாலியல் அடிமையாக பயன்படுத்த தொடங்கியதாக கூறப்படுகின்றது.
மகன் இல்லாத நேரத்தில் முருகேஸ்வரியின் வீட்டுக்கு வரும் சந்தோஷ் குமார், அவருடன் மது அருந்திவிட்டு வக்கிரமான முறையில் தனிமையை கழித்துள்ளான். கை நீட்டி கடன் வாங்கிய காரணத்தால் முருகேஸ்வரி இதனை பொறுத்துக் கொண்டுள்ளார்.
அண்மையில் தான் கொடுத்த மொத்த பணத்துக்கும் வட்டிப் போட்டு சந்தோஷ் குமார் பணத்தை திருப்பிக்கேட்டதால், சந்தோஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை மகனிடம் கூறி அழுத முருகேஸ்வரி சந்தோஷ்குமாரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி 3 நாட்களுக்கு முன்பாக சந்தோஷ்குமாரை அவனது வீட்டிற்கு சென்ற ஆரோக்கியதாஸ் மது அருந்த அழைத்துச்சென்றுள்ளான், கூட்டாளி பாலசுப்ரமணியும் உடன் இருந்துள்ளனர்.
மிதமிஞ்சிய மதுபோதையுடன் சந்தோஷ்குமாரை தனது வீட்டுக்கு அழைத்து வந்த ஆரோக்கியதாஸ், தனது தாய் மற்றும் கூட்டாளியுடன் சேர்ந்து சித்ரவதை செய்து சந்தோஷ்குமாரை கொலை செய்துள்ளனர்.
பின்னர் சடலத்தை எங்கு வீசுவது என்று தெரியாமல், இருசக்கரவாகனத்தில் சந்தோஷ்குமாரின் சடலத்தை சாய்ந்து உட்கார்ந்து இருக்குமாறு வைத்துப் பிடித்துக் கொண்டு கூட்டாளி பால சுப்பிரமணியத்துடன் ஊரை சுற்றியுள்ளனர்.
சடலத்தை ஊருக்குள் வீசினால் உடனே அடையாளம் தெரிந்து விடும் என்று கல்லாங்காடு பகுதிக்கு சென்றுளனர். அந்த பகுதியில் உள்ள பாறைக்குழிக்குள் சந்தோஷ்குமாரின் சடலத்தை போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து விட்டு தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலில் தங்களுக்கு தெரியாது என்றும், சந்தோஷ்குமார் தனக்கு தம்பி மாதிரி என்றும் கதை அளந்த முருகேஸ்வரியிடம் அவரது மகன் கொலையை ஒப்புக் கொண்டு விட்டதாக கூறியதை தொடர்ந்து சந்தோஷ்குமார் தனக்கு பாலியல் கொடுமை செய்ததாகவும் தானும் சேர்ந்துதான் கொலை செய்ததையும் முருகேஸ்வரி ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடனை திருப்பிக் கேட்டதாலும், தவறான உடல் சார்ந்த தேடலாலும் இந்த கொடூர கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.