சினிமாவை மிஞ்சும் திக் திக்.. மனைவி உட்பட 3 பேரை வெட்டி சாய்த்த கணவர் விபத்தில் பலியான சோகம்!!

366

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் வசித்து வருபவர் சுந்தர் கணேஷ் . இவரது மனைவி நித்யா . கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சுந்தர் கணேஷ் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் பணியிலிருந்து விலகினார். அதன்பிறகு அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை இதனால் வீட்டிலேயே இருந்தார்.

நித்யா தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அடுத்தடுத்து வந்த பொருளாதார பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை விற்பனை செய்வது குறித்து கணவன் மனைவி மத்தியில் தகராறு ஏற்பட்டது.

இந்த தொடர் சண்டை 3 நாட்களுக்கும் மேலாக நீடித்தது. உறவினர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. அவர்கள் சென்றதும் இது குறித்து மீண்டும் கணவன், மனைவி மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ் தன் மனைவி நித்யாவை அரிவாளால் சராமாரியாக வெட்டி விட்டு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இதன் பிறகு பரிசுத்தம் நகருக்கு சென்று அங்கு பால் பூத் நடத்தி வரும் திருவையாறு அருகே கீழத் திருப்பூந்துருத்தி தாமரைச்செல்வன் மற்றும் கோபி இருவரையும் சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டினார். இதனையும் முடித்துவிட்டு திருச்சி சாலையில் தப்பி சென்று விட்டார். அரிவாளை கொண்டு வெட்டியதால் நித்யா அலறித் துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த நித்யாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து பால் பூத்தில் நடந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வன், கோபியையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

ஆத்திரத்தில் காரை ஓட்டிச் சென்ற சுந்தர்கணேஷ் நகர் பகுதியில் தாறுமாறாக இயக்கியதால் செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் எதிரில் வந்த லாரி மீது நேருக்கு நேர் கார் மோதினார். இதில் படுகாயம் அடைந்த சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சினிமாவில் வருவது போல் அடுத்தடுத்த கோர சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.