தங்கை முறையுள்ள பெண்ணுடன் காதல் திருமணம்… பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

540

கர்நாடகா மாநிலத்தில் தங்கை முறை உள்ள இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களும், உறவினர்களும் முறை தவறிய காதல் உறவைக் கைவிட அறிவுறுத்தி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் மாகனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பா (24). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவருக்கும், இவரது உறவினர் சசிகலாவுக்கும் (20) இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் அண்ணன் – தங்கை உறவு முறை என்பதால் இருவரது பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் கொல்லப்பாவும், சசிகலாவும் பெற்றோர்களது எதிர்ப்பை மீறி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், தகாத உறவு முறை குறித்து கூறி சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது குறித்து கொல்லப்பாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கொல்லப்பா, சசிகலாவை சந்தித்து பேசி, இருவரும் வீட்டை விட்டு ஓடினார்.

அதன் பின்னர், கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடியது பற்றி அறிந்தவுடன் இருவீட்டாரும் அவர்களை தேடினர்.

இதற்கு இடையே பெற்றோர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என நினைத்த கொல்லப்பா மற்றும் சசிகலா கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


முன்னதாக அவர்கள் தற்கொலை செய்வது மற்றும் அதற்கான காரணத்தை வீடியோவாக எடுத்து தங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பினர்.

இதுகுறித்து அறிந்தவுடன் பதறிய குடும்பத்தினர் கிராமத்தின் புறநகர் பகுதிக்கு விரைந்தனர். அங்கு மரத்தில் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து யாத்ரமி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொல்லப்பா மற்றும் சசிகலா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.