தந்தையை இழந்த துக்கம்… மேம்பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட மகன்!!

266

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ரியாஸ் (23). இவருடைய தந்தை அல்லாஹ் பிச்சை உடல்நலக் குறைவு காரணமாக அவதியுற்றுவந்தார். தந்தை அல்லாஹ் பிச்சை மீது மகன் முஹம்மது ரியாஸ் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அல்லாஹ் பிச்சை, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த மகன் ரியாஸ், தந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்து காணப்பட்டிருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய தந்தையின் மறைவை நினைத்து அவர் மனம் புழுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த அவருடைய உறவினர்கள், முஹம்மது ரியாஸைச் சாமாதான வார்த்தைகள் சொல்லி, மனதைத் தேற்றியிருக்கின்றனர்.

இருந்தாலும், தந்தையின் இழப்பை நினைத்து மனம் வருந்திக்கொண்டிருந்த முஹம்மது ரியாஸ், மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரிஸ்டோ மேம்பாலம் பகுதிக்கு நடந்து சென்றிருக்கிறார். அப்போது, மேம்பாலத்திலிருந்து திடீரென அவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனடியாக அந்தப் பகுதி மக்கள் ரியாஸை மீட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரியாஸ் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து, விசாரணை செய்துவருகின்றனர். முஹம்மது ரியாஸ் தன்னுடைய தந்தைமீது அதிக பாசம் வைத்திருந்ததுதான் இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அதேபோல், முஹம்மது ரியாஸுக்கும் உடல்நிலையில் சில பிரச்னைகள் இருந்ததாகவும், அதற்கு அவர் சிகிச்சை எடுத்துவந்ததாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில், தன்னுடைய தந்தையும் இறந்ததால், வாழ்க்கை மீது விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவை அவர் எடுத்திருக்கக்கூடும் என்று அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.