மகாராஷ்டிரா….
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காசர்வடவல்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் பாக்தி(29). இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி பாவனா(24), தனது குழந்தைகளான அன்குஷ்(8) மற்றும் குஷி(6) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு கணவரின் சகோதரர் விகாஷ் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.
அமித் ஹரியாணாவில் உள்ள தனது பூர்வீக கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி அமித்தின் மகன் அங்குஷூக்கு 8வது பிறந்த நாள் வந்துள்ளது.
இதையடுத்து, அவர்களை காண அவர் மும்பை சென்றார். பிள்ளைகளை மகிழ்விக்க கேக் வாங்கி சென்று, பிறந்தநாளும் சிறப்பாக கொண்டாடி உள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை விகாஷ் வேலை விஷயமாக வெளியில் சென்றார்.
மீண்டும் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பாவ்னா மற்றும் இரண்டு குழந்தைகள் கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்கள் கொல்லப்பட்ட கிரிக்கெட் மட்டையும், அங்கேயே கிடந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக போலீஸூக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அமித்துக்கு தன்னுடைய மனைவிக்கும், தன்னுடைய சகோதரனுக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகத் தெரிவித்துள்ளனர் .இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய அமீத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.