தலைசிதைந்து இளம்பெண் மரணம்.. தலைக்கு பதிலாக புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த பெற்றோர்!!

231

கடலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் வழுக்கி விழுந்து, மினி லாரி மோதி தலை சிதைந்து உயிரிழந்த இளம்பெண் நித்யா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைக்கு பதிலாக வெள்ளைப் பூசணி வைத்து அதன் மீது புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த செயல் அங்கிருந்தவர்களைக் கதற செய்துள்ளது.

கடலுார் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நித்யா (26). இவரது தோழி ஹரிணியுடன்(26) சோழிங்கநல்லுாரில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிணியின் இருசக்கர வாகனத்தில் இருவரும் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வேளச்சேரி உள்வட்டச் சாலையில், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தின் அருகே இவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வந்துக் கொண்டிருந்த மினி லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர்.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நித்யா, ஹெல்மெட் அணிந்திருந்த போதும், லாரி சக்கரம் நித்யாவின் தலை மீது ஏறி இறங்கியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச் சென்ற ஹரிணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநரான ராணிப்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார்(21) என்பவரைக் கைது செய்தனர்.


இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நித்தியாவின் உடல் கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உறவினர்கள் நித்யாவின் உடலை அடக்கம் செய்ய தயாரான நிலையில், தலை முழுவதுமாக சிதைந்து உயிரிழந்த காரணத்தினால், நித்யாவின் தலைக்குப் பதிலாக வெள்ளைப் பூசணியை தலைக்கு பதிலாக வைத்து, அதில் நித்யாவின் புகைப்படத்தை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்தது அஞ்சலி செலுத்தி வந்தவர்களைக் கதற செய்தது.