இப்படி எல்லாம் கூட வெறித்தனமாக பெண்கள் நடந்துக் கொள்வார்களா என்று பதற செய்கிறது நடந்த சம்பவம். 6 வயது சிறுமியை சித்தி, தலையணையால் அழுத்தி கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் கேரளா முழுவதும் பதைபதைக்க வைத்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலத்தைச் சேர்ந்தவர் அஜாஸ் கான் (38). இவரது முதல் மனைவியுடனான திருமணம் விவாகரத்தான நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் முஸ்கானா(6) வுடன் தனியே வசித்து வந்த அஜாஸ் கான், அனிஷா(26) என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் அனிஷா மீண்டும் கர்ப்பமானார். நேற்று அஜாஸ்கான் வழக்கம் போல் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் அஜாஸ் கானை செல்போனில் அழைத்த அனிஷா, சிறுமி முஸ்கானா வீட்டில் மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளார்.
உடனடியாக பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அஜாஸ் கான், முஸ்கானாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமி முஸ்கானாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கானா மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஜாஸ்கான் மற்றும் அனிஷாவிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த முஸ்கானாவை அனிஷா தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணற செய்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து சித்தி அனிஷாவை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் அஜாஸ் கானுக்கு தொடர்பு உள்ளதா, கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.