இராணிப்பேட்டை…
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ கண்ணன்…. இவர், அப்பகுதியில் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மதியம் அவரது வீட்டிற்கு இன்னோவா காரில் ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எனக்கூறிக் கொண்ட அந்த கும்பல், தங்கள் வீட்டை சோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
அதற்கு, ஆட்டோ கண்ணன், தங்களிடம் சோதனை செய்வதற்கான ஆணை உள்ளதா? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அதை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் நான் ஆண்டிற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்துகிறேன்., எனது ஆடிட்டரிடம் அதற்கான வசதிகள் உள்ளது.
தாங்கள் அனுமதித்தால் அதை எடுத்துக் கொண்டு வர சொல்கிறேன். அதை அவர்கள் சரிபார்க்க கோரியுள்ளார். எதையும் காதில் வாங்காத அந்த கும்பல் வீட்டில் இருந்த அனைவரது செல்போனையும் வாங்கி சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் அவர் பைனான்ஸ் கொடுப்பதற்காக வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 60 சவரன் தங்க நகையை எடுத்து வைத்துவிட்டு, அதற்கு ரசீது கேட்டுள்ளனர். நகைகளுக்கான ரசீதை அவர் காண்பிக்கவே. நகையை திருப்பி கொடுத்துள்ளனர். பணம் என்பதால் அதற்கான ரசீது அலுவலகத்தில் உள்ளதாகவும் சற்று நேரம் பொருத்து வழங்குவதாக ஆட்டோ கண்ணன் கூறியுள்ளார்.
அதற்கெல்லாம் நேரமில்லை என கூறிய 6 பேர் கொண்ட கும்பல் இந்த 6 லட்சம் ரூபாய் பணத்தை நாங்கள் எடுத்துச் செல்கிறோம், இதற்கான ரசீதை வேலூரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் காண்பித்துவிட்டு பின்பு இந்த பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அங்கிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டது.
இந்நிலையில் இது குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆட்டோ கண்ணன் விசாரித்தபோது. அது மாதிரியான எந்த ஒரு குழுவையும் சோதனைக்காக அனுப்ப வில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் வந்த சிசிடிவி வீடியோ காட்சிகளுடன் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரில் ஆற்காடு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவம் குறித்து சிசிடிவி வீடியோ உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி வருமானவரி அதிகாரிகள் வந்த காரின் பதிவு எண் போலியானது எனவும், அது இருசக்கர வாகனத்தின் பதிவு எண் எனவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கைவரிசை காட்டுவது போல, இந்த மோசடி கும்பல் 6 லட்சம் ரூபாயை அபேஸ் செய்து சென்றுள்ளதால், இதற்கு முன்பு வேறு இடங்களில் இது போன்று நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.