தான் நினைச்சதை அடையணும்கிற வெறி குடும்பத்தினரையே கொல்ல சிக்கன் ரைஸில் விஷம்!!

147

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் துடிதுடித்து இறந்த சம்பவத்தில் `திடுக்’ திருப்பமாக அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரைக் கைதுசெய்திருக்கிறார்கள் போலீஸார்

நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நதியா – சுரேஷ் தம்பதி. இவர்களுக்குக் கல்லூரி படிக்கும் வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மூத்த மகன் பகவதி, நாமக்கல்லில் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவருகிறார். தற்போது விடுமுறையில் இருப்பதால், இ-சேவை மையம் ஒன்றில் பகுதி நேரமாகப் பணிபுரிந்துவந்த பகவதி, கடந்த 30.04.2024-ம் தேதி முதல் மாதச் சம்பளம் வாங்கியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, இன்றிரவு எனது ட்ரீட் என்று சொல்லி குடும்பத்தினர் அனைவருக்கும் சிக்கன் ரைஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார் பகவதி. அதைச் சாப்பிட்ட நதியாவும், அவரின் மாமனார் சண்முகநாதனும் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்து இறந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த உணவுதான் ஃபுட்பாய்ஸனாக மாறி இரு உயிர்களைப் பறித்துவிட்டதாகக் கருதி ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.

தொடர் விசாரணையில், ஹோட்டலில் வாங்கிய சிக்கன் ரைஸில் பிரச்னையில்லை. அதில் விஷம் கலந்ததுதான் மரணத்துக்குக் காரணம் என்று கண்டுபிடித்த போலீஸார், பகவதியை கைது செய்திருக்கிறார்கள்!


இந்த வழக்கை விசாரித்துவரும் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள கருணாநிதி எனும் ஹோட்டலில்தான் ஏழு சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கியிருக்கிறார் பகவதி.

உணவில் பிரச்னை என்றால், அதனைச் சாப்பிட்ட அத்தனை பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இருவர் மட்டும் இறந்தது எப்படி என்று விசாரித்தபோது, ‘நான் சிக்கன் ரைஸைச் சாப்பிடுவதற்காகப் பார்சலைப் பிரித்தபோது, ஒரு மாதிரி நெடி அடித்தது.

அம்மா வேறு வயிறு வலிப்பதாகச் சொன்னதால், நான் அந்த உணவைச் சாப்பிடவில்லை. தாத்தா வீட்டுக்கும் போன் பண்ணிச் சொல்லிவிட்டேன்.’ என்றிருக்கிறார் மற்றொரு மகன்.

நாமக்கல்லில் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவரும் பகவதி, கோடை விடுமுறையில் இ-சேவை மையம் ஒன்றில் பகுதி நேரமாகப் பணிபுரிந்திருக்கிறார். அப்போது தேவராயபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்மீது அவருக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் காதல் விவகாரத்தை பகவதியின் அம்மா நதியாவும், தாத்தா சண்முகநாதனும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் பகவதி. இந்த நிலையில் சம்பவத்தன்று, ‘தனக்கு முதல் மாதச் சம்பளம் வந்திருக்கிறது. எல்லோருக்கும் சிக்கன் ரைஸ் வாங்கி வருகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள கருணாநிதி ஹோட்டலில் ஏழு சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கியிருக்கிறார். அதில், ஒரு பார்சலை உடன் வேலை செய்யும் நண்பருக்குக் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள ஆறு பார்சல்களுடன் வீட்டுக்குச் சென்றவர், கொசவம்பட்டி பாலத்துக்கு அருகே வைத்து சிக்கன் ரைஸில் விஷத்தைக் கலந்திருக்கிறார்.

மகனின் கொடூரமான திட்டத்தை அறியாமல் அம்மா நதியாவும், தாத்தா சண்முகநாதனும் விஷம் கலந்த சிக்கன் ரைஸைச் சாப்பிட்டு உயிரிழந்திருக்கிறார்கள். ஒன்றுமறியாத சிறுவர்கள் முதற்கொண்டு மொத்தக் குடும்பமும் பலியாகியிருக்க வேண்டிய நிலையில், பரிதாபமாக இரு உயிர்கள் பறிபோய்விட்டன” என்றனர்.

இந்த வழக்கை விசாரித்துவரும் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மூலமாகவே சிக்கன் ரைஸில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்தே உணவகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதே ஹோட்டலில் உணவு வாங்கிய வேறு யாரும் பாதிக்கப்படாத நிலையில், எங்களுடைய சந்தேகம் உடனடியாக பகவதி மீது திரும்பியது.

அவரைக் குறித்த விசாரணையில்தான், பெண் ஒருவருடனான காதல் விவகாரத்தில் பகவதியை அவருடைய குடும்பத்தினர் கண்டித்திருந்தது தெரியவந்தது. அதோடு, பகவதி செல்போன் பயன்படுத்தவும் தடைபோட்ட அவரின் அம்மா நதியா, உறவினர்கள் மத்தியிலும் மகனின் காதல் விவகாரத்தைச் சொல்லி அடிக்கடி மட்டம் தட்டியிருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பகவதி, தன் அம்மா, தம்பி, தாத்தா உட்பட மொத்தக் குடும்பத்தையும் விஷம் வைத்துக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

இதற்காக வயலுக்குத் தெளிக்கும் களைக்கொல்லி பூச்சி மருந்து குறித்து இன்டர்நெட்டில் தேடியிருக்கிறார் பகவதி. பிறகு கடைக்குச் சென்று அந்த களைக்கொல்லி விஷத்தை வாங்கியிருக்கிறார்.

சம்பவத்தன்று, சிக்கன் ரைஸ் பார்சல்களை வீட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில், தனது பேக்கில் இருந்த காம்பஸ் மூலமாக விஷ பாட்டிலின் மூடியில் துளையிட்டு, உணவில் விஷத்தைக் கலந்திருக்கிறார். இந்தத் தடயங்களின் மூலமாகவே பகவதிதான் கொலையாளி என்பதைக் கண்டுபிடித்தோம்” என்றனர்

இது குறித்து குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணனிடம் பேசியபோது, “இது முற்றிலும் காதல் விவகாரத்தால் நடந்த ஒரு துயரச் சம்பவம். கைதான பகவதியின் தம்பி உணவைச் சாப்பிட முயன்றபோது ஏதோ வித்தியாசமான வாடை வீசியதை அறிந்து சற்று சுதாரித்துக்கொண்டதால் மற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டன. காதலுக்காகக் குடும்ப உறுப்பினர்களையே கொல்வதற்குத் துணிந்திருக்கிறார் பகவதி.

அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் ஆபாசமான விஷயங்களைத் தேடியிருப்பது தெரியவந்தது. தற்போது கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அவர். குடும்பம்தான் பிரதானம் என்று நினைத்திருந்தால் இது போன்ற ஒரு காரியத்தை அவர் செய்திருக்க மாட்டார்” என்றார்.

மகன் கொலைக் குற்றவாளியாகிவிட, மனைவியையும் தந்தையையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு நிற்கும் லாரி டிரைவர் சுரேஷிடம் பேசினோம். “பிள்ளைகளுக்கு நான் எந்தவிதத்திலும் குறை வெச்சது கிடையாது. அவன் நல்லா இருக்கணும்னுதான் அவனை நல்லா படிக்க வெச்சேன்.

தான் நினைச்சதை அடையணும்கிற ஆசை அவனுக்கு உண்டு. ஆனா, அதுவே வெறியாக மாறி, தன்னோட சுயநலத்துக்காகக் குடும்பத்தையே இப்பிடி அழிக்க நினைப்பான்னு நினைச்சுக்கூட பார்க்கலை” என்று வேதனையில் புலம்பினார்.