தாயைக் கொன்ற மகன்.. வழக்கில் திடீர் திருப்பம்.. கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!!

565

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், காலை உணவு தராததால் 17 வயது மாணவன் தனது தாயை அடித்துக் கொன்றதாக பதிவான வழக்கில், திடீர் திருப்பமாக 40 வயதுடைய பெண்ணை, அவரது கணவரே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸார், அவரது கணவரை கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியையும் கைப்பற்றியுள்ளனர்.

பெங்களூரு கே.ஆர். புரம் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த இறந்தவரின் மகன், தான் டிப்ளமோ படித்து வருவதாகவும், தனக்கு காலை உணவு வழங்க மறுத்ததால் தனது தாயை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் தந்து சரணடைந்தது போலீஸாரை அதிர வைத்தது.

எனினும், மாணவனின் வாக்குமூலத்தை வழக்கில் சேர்க்காத போலீஸார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த துவங்கினார்கள்.

இந்நிலையில், கொலைச் செய்யப் பயன்படுத்திய இரும்பு கம்பியில், உயிரிழந்தவரின் கணவர் கைரேகைகள் பதிவாகியிருந்ததைக் கண்டுபிடித்த போலீஸார், தீவிர விசாரணைக்கு பிறகு அவரை கைது செய்தனர்.


போலீஸாரின் விசாரணையில், சந்திரப்பா(45), பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் உள்ள டெக்பார்க்கில் பணியாற்றி வந்த தனது மனைவி நேத்ராவுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். நேத்ரா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் தெரிய வந்துள்ளது.

பல நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும் நேத்ரா, தொடர்ந்து நாட்கணக்கில் வீட்டிற்கு வராமலும் இருந்துள்ளார். எங்கே செல்கிறார் என்கிற விவரங்களையும் சந்திரப்பாவிடமும், மகனிடமும் கூறாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேத்ராவின் குடிப்பழக்கமும், வீட்டை விட்டு அவ்வப்போது வார கணக்கில் காணாமல் போவதும், தொடர்ந்து வீட்டில் இருவரிடமும் தகராறு செய்து வருவதும் தந்தை, மகன் இருவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தன் மனைவி நேத்ராவைக் கொலை செய்ய முடிவு செய்து, தனது 17 வயது மகனையும் திட்டத்திற்கு சந்திரப்பா சம்மதிக்க வைத்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தன்னுடைய மகனிடம், மகன் சிறார் என்பதால் குறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும் என்றும், மகனின் கல்வி மற்றும் எதிர்காலத்தைத் தான் கவனித்துக் கொள்வதாகவும், புதிய வாழ்க்கை வாழலாம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.

அதன்படி, இருவரும் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை வீட்டில் தனியே இருந்த நேத்ராவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் சந்திரப்பா, ‘உணவு வழங்க மறுத்து அவமானப்படுத்தியதால் ஆத்திரத்தில் தாயைக் கொன்றதாக’ கூறி தனது மகனை காவல் நிலையத்தில் சரணடைய கூறிவிட்டு, தனது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றதாக போலீஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.