கல்யாணமாகி இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட முடியல… இப்போத் தான் மறுவீடு என்று வந்து போய் கொண்டிருந்தனர். அதுக்குள்ள புதுமணப்பெண் தன் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா (29). இவருக்கும் சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த விஸ்வப்பிரியாவுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், புதுமண தம்பதியர் உறவினர்கள் வீட்டிற்கும், தாய், மாமியார் வீட்டிற்கும் மறுவீடு சென்று வந்துக் கொண்டிருந்தனர்.
தனது கணவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்தபடியே திருவள்ளூரில் இருந்து சென்னை திருவேற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு விஸ்வ பிரியா சென்றுக் கொண்டிருந்தார்.
கவரப்பேட்டை-சத்யவேடு சாலையில் குருவராஜா கண்டிகை சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், நாகார்ஜுனா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகார்ஜுனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த விஸ்வ பிரியா ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.